அரச தரப்பில் இருக்கின்ற சிலரது வாய்களுக்குக்கு கடிவாளம் போட வேண்டும். ஏனென்றால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாவிட்டால் சாதாரண பெரும்பான்மையைக்கூட ஆளும் தரப்பினால் பெறமுடியாமல் போய்விடுமோ என்ற அச்ச நிலை இப்போது தோன்றியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கண்டி மாவட்ட வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் கூறியதாவது, அத்தகைய இனவாத கருத்துக்களை வெளியிடுவோரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் மட்டுமே கட்டுப்படுத்த முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளது.
ஆட்சி அமைக்க சிறுபான்மை சமூகத்தினரினதும் வாக்குகள் அவசியம் என்ற பிரதமரின் அண்மைய பேச்சு அவரின் முதிர்ந்த அரசியல் ஞானத்தை குறிக்கிறது இருந்தபோதும் அவர் இவ்வாறு பேசுவதனால் மாத்திரம் சிறுபான்மையினரின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியாது.
இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் ஆழமாக சிந்தித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாதுகாக்குகின்ற வகையில் நமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.
சிறுபான்மை சமூகத்தின் தன்மானமும், சுய கௌரவமும் பேணப்படுகின்ற வகையில் ஆணவத்ததோடு செயற்படுகின்றவர்களுக்கு தமது எதிர்ப்பை இந்தத் தேர்தலில் காட்டுவார்கள் என்பது எனது கணிப்பு.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் எடுத்த முடிவு மிகச்சரியானது. இதனை ஜனாதிபதியிடம் நான் தைரியமாக சொன்னேன். நீங்கள் ஜனாதிபதி ஆகியது தொடர்பில் நாங்கள் சந்தோசப்படுகிறோம்.
அதேவேளை நாங்களும் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பௌத்தர் ஒருவருக்கே ஆதரவு வழங்கினோம். அதனை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். அது எங்களது ஜனநாயக உரிமை. ஆனால் நாங்கள் ஆதரித்தவர் ஏன் வெற்றி பெறவில்லை என்பது தொடர்பில் எங்களை நாங்களே சுய விமர்சனம் செய்து கொள்கிறோம்.
சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியில் உங்களை சந்தைப்படுத்த முடியாமல் இருக்கிறது நீங்கள் கொஞ்சம் விலகியிருக்குமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவிடம் வினயமாக கேட்டுக் கொண்டோம். அவர் அதனை ஒத்துக் கொள்ளவில்லை. நாங்கள் சிறுபான்மை கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அவரோடு பேசிப்பார்த்தோம் அவர் மசியவில்லை. சம்பந்தன் ஐயாவும் சொன்னார். அவர் எதையும் கண்டுகொள்ளவில்லை.
கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்களிலும் அவரால் களமிறங்க முடியவில்லை. இரண்டு தேர்தல்களுக்கு இருவரை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிலும் இரண்டாவதாக இறக்குமதி செய்தவர் செய்த வேலைகள் நாம் யாவரும் அறிந்ததே.
தினகரன்
No comments:
Post a Comment