பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பாரிய வெற்றியை நோக்கிய முன்நகர்வுகளை ஆரம்பிக்கவுள்ளோம் - இம்முறை எதிர்த்தரப்பொன்று இல்லாமலேயே நாம் பிரசாரங்களை செய்யப்போகின்றோம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 3, 2020

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பாரிய வெற்றியை நோக்கிய முன்நகர்வுகளை ஆரம்பிக்கவுள்ளோம் - இம்முறை எதிர்த்தரப்பொன்று இல்லாமலேயே நாம் பிரசாரங்களை செய்யப்போகின்றோம்

(நா.தனுஜா)

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவை வெற்றி பெறச் செய்யும் நோக்குடன் செயற்பட்டோம். தற்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பாரிய வெற்றியொன்றை அடைந்துகொள்ளும் இலக்கை முன்நிறுத்தி பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கவிருக்கிறோம் என்று முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானியையும், எதிர்வரும் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த வர்த்தமானியையும் வலுவிழக்கச் செய்யுமாறுகோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதில்லை என்று நேற்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் நிலையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழு கூடுகின்றது. இதன்போது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான திகதியொன்று நிர்ணயிக்கப்படுமென்று எதிர்பார்க்கின்றோம்.

நாம் எமது கட்சியின் சார்பில் தேர்தல் பிரசார வேலைகளை கடந்த ஜனவரி மாதத்திலேயே ஆரம்பித்துவிட்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய நிலையேற்பட்டது. அதன் மத்தியிலும் பிரதேச ரீதியான எம்மாள் மேற்கொள்ளத்தக்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தோம்.

இத்தருணத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜனாதிபதி, பிரதமர், இராணுவத் தளபதி, முப்படையினர், பொலிஸார், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறுகின்றோம்.

ஏனெனில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளித்திருக்கின்றன என்பது அனைவருக்கும் நன்கு தெரியும். அதன் காரணமாக தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பொன்று காணப்படுகின்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பாரிய வெற்றியொன்றை அடைந்துகொள்ளும் இலக்கை முன்நிறுத்தி பிரசாரப்பணிகளை ஆரம்பிக்கவிருக்கிறோம். அதிலும் இம்முறை எதிர்த்தரப்பொன்று இல்லாமலேயே நாம் பிரசாரங்களை செய்யப்போகின்றோம்.

எதிர்த்தரப்பினர் அவர்களுக்குள்ளேயே பிரிந்துநின்று முரண்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமக்குள்ளேயே பிளவடைந்திருக்கும் அவர்களுக்கு மக்கள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இந்நிலை பொதுத் தேர்தலில் எமக்குச் சாதகமாக அமையும் என்றே எதிர்பார்க்கின்றோம்.

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் ஒரு ஸ்திரமான அரசாங்கத்தை அமைத்து, சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கி, அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் ஆராயப்படும்.

இயற்கை அவ்வப்போது மனித சமுதாயத்திற்குத் தண்டனைகளை வழங்கும். அதிலிருந்து எவரும் தப்பவே முடியாது. எனினும் அதனால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மீண்டு உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி என்பவற்றை அதிகரித்துப் பொருளாதாரத்தை வலுவூட்ட வேண்டிய தேவையிருக்கிறது. அதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எமது கட்சி ஆலோசனைகளை வழங்கத்தயாராக இருக்கிறது.

இச்சசந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.

கேள்வி : எமது நாடு வெளிநாடுகளிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ள நிலையில், இவ்வருடம் அக்டோபர் மாதமளவில் பெருந்தொகையை மீளச்செலுத்த வேண்டியுள்ளதே. இதனை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளும்?

பதில் : உண்மையில் எமது நாடு எதிர்கொண்டிருப்பது ஓர் கடன்வலையாகும். நாட்டில் போர் நிலவிய காலகட்டத்தில் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பெற்ற கடன்கள் உள்ளடங்கலாக சுமார் 3 தசாப்த காலத்திற்கும் மேலாகப் பெற்ற கடன்களே இவை. இதனை மீளச்செலுத்துதல் மற்றும் கையாளுதல் என்பன தொடர்பில் அரசாங்கம் அமைத்த பின்னர் உரிய பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று அமைச்சரவையிலும், பாராளுமன்றத்திலும் இதுபற்றிக் கலந்தலோசிக்க வேண்டும்.

அதேவேளை தற்போது கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக முழு உலகுமே நெருக்கடியொன்றுக்குள் உள்ளது. எமது நாடு மாத்திரமன்றி, உலகநாடுகள் பலவும் கடன்தொகையை மீளச்செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. எனவே இத்தருணத்தில் கடன்களை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெற்றுத்தரவேண்டும் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சர்வதேச நிதியமைப்புக்களிடம் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார். அத்தகைய சில வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.

கேள்வி : உங்களுடைய தரப்பு பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று, அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஏகாதிபத்தியவாதம் ஒன்றை நோக்கிப் பயணிப்பதற்கு முயல்வதாகக் குற்றஞ்சுமத்தப்படுகிறதே?

பதில் : நாம் அத்தகைய திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் காணப்படும் குறைபாடுகளைத் திருத்தியமைப்பதே எமது நோக்கமாகும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் சிறந்த விடயங்களைப் போன்றே தீங்கான விடயங்களும் உள்ளன. உதாரணமாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டமை சிறந்த விடயமாகும். எனினும் அவை ஜனாதிபதிக்குக் கீழ் இயங்கவில்லை. மாறாக பாராளுமன்றத்தின் அரசியலமைப்புப் பேரவையின் கீழேயே இயங்கின. அந்த ஆணைக்குழுக்கள் இயங்கும் முறை, அவற்றின் அதிகாரங்கள் மற்றும் வரையறைகள் உள்ளிட்ட கோவையைத் தயாரிக்குமாறு நான் கோரிக்கை விடுத்தேன். அதனை அவர்கள் செய்யவில்லை. ஏனெனில் சுயாதீன ஆணைக்குழுக்களின் ஊடாகத் தமக்குத் தேவையானவற்றைச் சாதித்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

அதேபோன்று 19 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. அதனூடாக உண்மையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மாத்திரமே குறைக்கப்பட்டன. இவ்வாறு மூவர் மத்தியில் அதிகாரங்கள் பகிரப்பட்டமை முரண்பாடுகள் ஏற்படுவதற்கு வழிவகுத்தது. அவையே குறைபாடுகளாகக் காணப்படுகின்றன.

கேள்வி : ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், பதவிக்காலம் முடிவடைந்ததும் அரசியலில் இருந்து ஓய்வுபெறப்போவதாகக் கூறிய நீங்கள் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடக் காரணம் என்ன? கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து ரணிலுடன் இணைந்த நீங்கள், எதிர்காலத்தில் மீண்டும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையும் வாய்ப்புள்ளதா?

பதில் : கடந்த அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடுகளே நான் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்குக் காரணமாகியிருக்கின்றன. அரசியலில் நிரந்தர நண்பனோ, நிரந்தர எதிரியோ கிடையாது. இது நமது நாட்டிற்கு மாத்திரமன்றி உலக அரசியலுக்கும் நன்கு பொருந்தும். எனினும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாம் கோத்தபாய ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதெனத் தீர்மானித்து, அதற்காக முன்நின்று செயற்பட்டோம். அவ்வாறே அவர் வெற்றியடைந்து ஜனாதிபதியாகத் தெரிவானார். அப்போதைய எமது தீர்மானத்தில் தற்போதும் எவ்வித மாற்றமும் இல்லை. இம்முறை பொதுத்தேர்தலில் அரசாங்கத்தின் வெற்றியை முன்நிறுத்தியே எமது பணிகளை மேற்கொள்வோம்.

கேள்வி : ரோயல் பார்க் கொலைக்குற்றவாளிக்குப் பொதுமன்னிப்பு வழங்குவதற்கு நீங்கள் தீர்மானித்தமைக்கான காரணம் பற்றி விளக்கமுடியுமா?

பதில் : இதுபற்றி நான் ஏற்கனவே பலதடவைகள் கூறிவிட்டேன். என்னளவிற்கு வேறு எந்த ஜனாதிபதியும் பொதுமன்னிப்பு வழங்கியதில்லை. பொதுமன்னிப்பை நான் மாத்திரம் தன்னிச்சையாக வழங்கமுடியாது. உரிய தொடர்புடைய தரப்புக்கள் அனைவருடனும் கலந்துரையாடி ஆலோசனை பெறப்பட்டதன் பின்னரே பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இது மிகவும் விரிவான விடயமாகும். எனவே அதுகுறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசலாம்.

கேள்வி : மத்தியவங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய அர்ஜுன மகேந்திரனைக் கைது செய்வதற்காக நீங்கள் 21 ஆயிரம் கையெழுத்துக்கள் இட்டமையால் ஏதேனும் பயனேற்பட்டுள்ளதா?

பதில் : ஆரம்பத்தில் அர்ஜுன மகேந்திரன் பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டிருப்பதாகவும், அவரைக் கைதுசெய்யுமாறும் கோரி நாம் சர்வதேச பொலிஸிற்கு (இன்டர்போல்) கடிதமொன்றை அனுப்பிவைத்தோம். எனினும் எமது அரசாங்கத்திலிருந்து வேறொரு தரப்பினர், இது பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என்றும் இதுவோர் அரசியல் பிரச்சினையென்றும் கடிதம் அனுப்பினர்.

அதனால் இன்டர்போல் இதில் தலையிட முடியாதென எமக்கு அறிவித்தது. மீண்டும் இதுபற்றி விளக்கிக் கடிதமொன்றை அனுப்பிய பின்னரேயே அவர்கள் சிவப்பு அறிவித்தல் விடுத்தார்கள். எனினும் இந்த மத்தியவங்கி பிணைமுறி மோசடியின் ஊடாக நன்மையடைந்தவர்களே அவரைக் கைது செய்வதைத் திட்டமிட்டுக் குழப்பிவருகிறார்கள். அவர்கள் யார் என்பது நாட்டுமக்கள் அவைருக்கும் தெரியும்.

No comments:

Post a Comment