இதுவரை 9,580 இலங்கையர் நாடு திரும்பல், 52,401 பேர் நாடு திரும்ப கோரிக்கை : ஜுன் 24 - ஜுலை 07 வரை 10 நாடுகளிலுள்ள இலங்கையர் நாடு திரும்பவுள்ளனர் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

இதுவரை 9,580 இலங்கையர் நாடு திரும்பல், 52,401 பேர் நாடு திரும்ப கோரிக்கை : ஜுன் 24 - ஜுலை 07 வரை 10 நாடுகளிலுள்ள இலங்கையர் நாடு திரும்பவுள்ளனர்

2020 ஜுன் மாதம் 16ஆம் திகதியளவில் 117 நாடுகளிலுள்ள இலங்கையர்களில் 52,401 பேர் மீண்டும் நாட்டிற்கு வருவதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 உலகளாவிய தொற்று நிலைமைக்கு மத்தியில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களில் இன்னல்களுக்கு உட்படக்கூடிய பிரிவு தொடர்பிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக வெளிநாட்டு உறவுகள் அமைச்சு மற்றும் வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுக் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிவாரணத்திற்கான நடைமுறைகள் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தவினால் நேற்றையதினம் (24) அமைச்சரவையின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகம் மற்றும் கொவிட் செயற்பாட்டு செயலணியுடன் இணைந்து இதுவரையில் 38 நாடுகளிலிருந்து 9,580 இற்கு மேற்பட்ட இலங்கையரை இந்நாட்டிற்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோன்று மேலும் 10 நாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஜுன் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் ஜுலை மாதம் 07ஆம் திகதி வரையில் 10 விமான பயணங்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் ஏனைய இடங்களிலுள்ள இன்னல்களுக்கு உள்ளாகக்கூடிய பிரிவினருக்காக உலர் உணவு பங்கீடு, அடிப்படை மருந்து , பாதுகாப்பு உடைகள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்திற்காக 42.6 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகை இலங்கை தூதுக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

பொருட்கள் தட்டுப்பாடு நிலவுதல் மற்றும் உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் சிரமங்கள் நிலவும் மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு உலர் உணவு மற்றும் மருந்து வகைகள் அடங்கிய 15.5 மில்லியன் ரூபா பெறுமதியைக் கொண்ட 5,000 பொதிகளை அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருக்கும் இலங்கையர்களின் தேவைக்காக அந்த நாடுகளில் இலங்கை குழுவினரால் தேவையான வகையில் இராஜதந்திர பிரதிநிதித்துவம் மேற்கொள்ளப்படுவதுடன், இலங்கையர்களுடன் தொடர்ச்சியாக தொடர்புகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இலங்கைத் தூதுக் குழு (Sri Lanka Mission) செயல்படாத நாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினால் தேவையான சேவைகளை மேற்கொள்வதற்காக தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோன்று இந்த உலகளாவிய தொற்றின் காரணமாக இலங்கைக்கு ஏற்படக் கூடிய பொருளாதார அழுத்தத்தைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காக இலங்கை இராஜதந்திர தூதுக்குழுவினரால் புதிய வர்த்தக சந்தைகளை அடையாளங் காண்பதற்கும் தற்பொழுதுள்ள வர்த்தக சந்தைகளில் நிலவும் கோரிக்கையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment