முன்பள்ளிகளை 50 வீத மாணவர் பங்களிப்புடன் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 27, 2020

முன்பள்ளிகளை 50 வீத மாணவர் பங்களிப்புடன் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு

நாட்டில் அனைத்து முன் பள்ளிகளும் சுகாதாரத் துறையினர் ஆலோசனைக்கிணங்க 50 வீத மாணவர்களுடன் ஆரம்பிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், முடக்கப்பட்ட நாடு மீண்டும் திறக்கப்பட்டு 45 நாட்கள் கடந்துவிட்டன. இந்த நிலையில் தமது பிள்ளைகளுக்கான ஆரம்பப் பாடசாலைகளைத் திறப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நாட்டிலுள்ள அனைத்து பெற்றோர்களும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அரசாங்கம் உடனடியாக அதனைக் கவனத்திற் கொண்டு ஆரம்பப் பாடசாலை ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்த பாடசாலைகளை திறந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி 50 வீத மாணவர்களுடன் கல்வி நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளதென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் 13ஆம் திகதி நாட்டின் அனைத்து பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment