பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது - 03 இலட்சம் ரூபா கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - தனியார் பஸ் காப்புறுதிக்காலம் 03 மாதங்கள் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 8, 2020

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படமாட்டாது - 03 இலட்சம் ரூபா கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை - தனியார் பஸ் காப்புறுதிக்காலம் 03 மாதங்கள் நீடிப்பு

கொரோனா வைரஸ் சூழ்நிலையால் பஸ் வண்டிகள் போக்குவரத்தின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவற்றை திருத்துவதற்கும் தேவையான உதிரிப்பாகங்களைப் பெற்றுக் கொள்வதற்காகவும் பஸ் உரிமையாளர்களுக்கு 03 இலட்சம் ரூபா வரை கடன் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

பொதுப் போக்குவரத்து சேவைகள் நேற்று முதல் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற விஷேட பேச்சுவார்த்தையின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 

அது தொடர்பில் மக்கள் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் ஜனாதிபதியின் செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் வங்கிகள் மூலம் அந்தக் கடனை பெற்றுக் கொள்வதற்கு வழிவகை செய்யப்படுமென அமைச்சர் தெரிவித்தார். 

பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர், பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது. பஸ் உரிமையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 

நேற்றைய பேச்சுவார்த்தையில் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து தொடர்பில் நேர அட்டவணை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது. 

அதேவேளை பஸ் கட்டணங்களை அதிகரிப்பதில்லையென்றும் தற்போதுள்ள கட்டணத்திலேயே சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க பஸ் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். 

தற்போது காலதாமதம் ஆகியுள்ள லீசிங் தவணை தொடர்பில் கால அவகாசத்தை வழங்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தனியார் பஸ் வண்டிகளுக்கு காலம் நிறைவடைந்த நிலையில் காப்புறுதிக்காக 03 மாதங்கள் கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. 

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment