(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவல் எதிர்காலத்திலும் காணப்படுமானால் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் 6000 வரை அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலில் அதிகரிக்கும் போக்கு அவதானிக்கப்படுமாயின் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக மேலும் முன்னெடுக்கப்பட வேண்டிய விசேட செயற்திட்டங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள விசேட ஆலோசனைக் குழு நேற்று வெள்ளிக்கிழமை கூடியது. இதன் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது இந்த விசேட ஆலோசனைக் குழு வைத்திய நிர்வாகிககள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட 35 உறுப்பினர்களைக் கொண்டதாகும். இக்குழு இரு நாட்களுக்கு ஒரு முறை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் கூடும்.
இதன்போது எதிர்காலத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் போக்கு அவதானிக்கப்படுமானால் நாளொன்றுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் 6000 ஆக அதிகரிக்கப்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் பி.சி.ஆர் பரிசோதனைகள் அரச மற்றும் தனியார் ஆய்வு கூடங்கள் 15 இல் முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், இந்த ஆய்வு கூடங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு தேவையான பாதுகாப்பு அங்கிகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அதனை விட ஏனைய துறைகளிலும் வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வேண்டிய தனியாள் பாதுகாப்பு அங்கிகளையும் குறைபாடின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பவித்திரா உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
எதிர்காலத்தில் அபாய வலயங்களில் திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் பட்சத்தில் அந்த பிரதேசங்களில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது. அவை தொடர்பான ஆலோசனை கோவையொன்றினையும் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் பபா பலிஹவடன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment