முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது - முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது - முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுப்பதற்கு எவரும் முயற்சிக்கக் கூடாது. இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்து மன ஆறுதல் அடைவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும் என்று முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினொராவது ஆண்டு நினைவேந்தல் நாளை அனுஷ்டிக்கப்படும் நிலையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதி யுத்தத்தின் போது பேரழிவுகள் இடம்பெற்றிருந்தன. அந்த சொல்லொண்ணா துயரத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பதினொராவது ஆண்டு நிகழ்வு இன்று இடம்பெறுகிறது. உயிரிழந்த தமது உறவுகளை வருடந்தோறும் நினைவேந்தல் செய்வதற்கு மக்களுக்கு பூரண உரிமை உண்டு. இவ்வாறு நினைவேந்தல் செய்வதன் மூலம் மக்கள் மன ஆறுதலை அடைந்து கொள்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு ஏற்பட்ட அவலத்தை ஐந்து வருடங்களாக நினைவுகூர முடியாத நிலைமை அன்றைய ஆட்சிக் காலத்தில் நிலவி வந்தது. 2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் முதன்முதலாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அந்த மண்ணில் அனுஷ்டிக்கும் நிலைமை உருவாகியிருந்தது.

அன்று முதல் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக அந்த மண்ணிலே மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஆட்சி மாறியுள்ள நிலையில் நினைவேந்தலுக்கு தடை போடும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அந்த மண்ணில் மேற்கொள்வதற்கு தடைகள் போடப்படுகின்றன.

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போதைய நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியைப் பேண வேண்டியது அவசியமாகும். இதனால் மக்கள் வீடுகளிலிருந்தே இன்று மாலை சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்துவதே சிறந்ததாகும். இவ்வாறு அஞ்சலி செலுத்துவதற்கு எவரும் தடைபோடக் கூடாது. இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

முள்ளிவாய்க்கால் அவலத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலியை செலுத்தும் ‍அதேவேளை நீதிகோரி நிற்கும் மக்களுக்கு நீதியை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

No comments:

Post a Comment