பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வாதம் - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜரான மனுவொன்றுக்கும் முடிவு கிடைத்தது - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வாதம் - ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆஜரான மனுவொன்றுக்கும் முடிவு கிடைத்தது

(எம்.எப்.எம்.பஸீர்) 

தற்போதைய நிலையில், 2020 பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடாத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அதிகாரபூர்வமாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தது. 

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20 ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும், ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக்கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று 3 ஆவது நாளாக பரிசீலனைக்கு வந்தது. 

இதன்போதே தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய, உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை நீதிமன்றுக்கு அறிவித்தார். 

இன்றையதினம் மேற்படி தாக்கல் செய்யப்பட்டிருந்த 8 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான பரிசீலனையானது, மூன்றாவது நாளாகவும் உயர் நீதிமன்ற சம்பிரதாய அமர்வு இடம்பெறும் மண்டப அறையில் பரிசீலனைக்கு வந்தது. 

இதன்போது பிரதிவாதிகள் தரப்பு வாதத்தை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், பொதுத் தேர்தல் ஜூன் 20 இல் இடம்பெறாது என அறிவித்தார். 

பிரதம நீதியர்சர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியர்சர்கள் குழாம் முன்பே இம்மனுக்கள் இன்று பரிசீலனைக்கு வந்தன. 

இதன்போது, சட்டத்தரணி சரித்த குணரத்ன சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எஸ்.சி.எப்.ஆர். 83/2020, ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உள்ளிட்ட 8 பேரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எஸ்.சி.எப்.ஆர். 85/2020 ஆகிய இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய, உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆஜரானார். 

ஏனைய 6 அடிப்படை மனுக்களிலும் அம்மூன்று பிரதிவாதிகளும் பெயரிடப்பட்டுள்ள போதும் அம்மனுக்கள் சார்பில் அவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி சொக்ஷி ஆஜரானார். 

இந்நிலையில் பிரதிவாதிகள் சார்பிலான வாதங்களை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், முதலில் வாதங்களை முன்வைத்தார். 'அரசியலமைப்பின் 103(2),93 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடாத்த ஆணைக்குழு கட்டுப்பட்டுள்ளது. அந்த அத்தியாயங்களில் தேர்தல்கள் ஆணைக்குழு எதனை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதோ அதனையே ஆணைக்குழு செய்துள்ளது. 

தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்ததன் பின்னர், கொவிட் பரவல் நிலைமை தீவிரமடைந்ததால், ஏப்ரல் 25 ஆம் திகதி நடாத்த தீர்மானிக்கப்பட்ட பொதுத் தேர்தல் பின்னர் ஜூன் 20 ஆம் திகதிக்கு பிற்போடப்ப்டடது. 

இங்கு கடந்த மார்ச் 17,18,19 ஆம் திகதிகளில் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்டமை தொடர்பில் இங்கு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றில் எந்த பூர்வமான விடயங்களும் இல்லை. உண்மையில் விடுமுறை தினங்களாக 17,18,19 ஆம் திகதிகள் அறிவிக்கப்பட்டாலும், அவை விஷேட பொது விடுமுறை என்றே அறிவிக்கப்பட்டது. 

இது தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்கள பணிப்பாளர் விபரமாக அறிவித்தல்களை வழங்கியிருந்தார். அதன்படி விஷேட பொது விடுமுறை தினமாக அந்நாட்கள் அறிவிக்கப்பட்டாலும், மாவட்ட, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட அரச நிறுவங்கள், அத்தியாவசிய சேவைகள் தொடர்பிலான அலுவலகங்கள் அன்றைய தினங்களில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனால் அந்த மூன்று நாட்களிலும் வேட்பு மனுக்களை ஏற்றுக்கொண்ட விடயமானது பிரச்சினைக்குரிய விடயமல்ல. 

தற்போது நாட்டில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மட்டும் முழு நேர ஊரடங்கு நிலை அமுலில் உள்ளது. ஏனைய பகுதிகளில் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அமுல் செய்யப்படுகின்றது. தற்போதைய சூழலில் தேர்தலை நடாத்துவது என்பது மிக சவாலானது. அதனால் தேர்தலை நடாத்துவதாயின் அதனை எவ்வாறு எப்படி நடத்துவது என்பது குறித்து மிக ஆழமாக ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டியுள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 24(3) ஆம் அத்தியாயத்துக்கு அமையவே தேர்தலை ஜூன் 20 இல் நடாத்த திகதி குறித்தது. எனினும் இதுவரை தேர்தலை நடாத்த முடியும் என சுகாதாரத் தரப்பிலிருந்து ஆணைக்குழுவுக்கு பச்சை சமிக்ஞை கிடைக்கவில்லை. 

தேர்தலை நடாத்தப்படுமானால், அதனுடன் தொடர்புபடும் அதிகாரிகள் நாளொன்றுக்கு 16 முதல் 18 மணி நேர கடமையில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டி வரும். எவ்வாறாயினும் தற்போதைய ஊரடங்கு நிலைமை, சமூக இடைவெளி போன்ற விடயங்களை வைத்து பார்க்கும் போது நாளொன்றுக்கு அதிக பட்சம் ஒருவரால் 12 மணி நேரம் மட்டுமே கடமைகளைச் செய்ய முடியுமாக இருக்கும். 

இந்நிலைமையை கையாள, ஏற்கனவே தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்டு ஓய்வுபெற்றுள்ள அதிகாரிகளின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் சேவைக்கு வர தயங்குகின்றனர். காரணம், அவர்கள் வயதானவர்கள். இந்த கொரோனா பரவல் அந்த வயதானவர்களை இலகுவாக தொற்றிக்கொள்ள வாய்ப்புள்ளது. 

இவ்வாறான நிலைமை இருக்கும் போது, தற்போது தீர்மானிக்கப்பட்டிருக்கும் ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்துவது சாத்தியமற்றது. தேர்தலை நடாத்துவதற்கு சுகாதார அதிகாரிகளிடம் இருந்து வழிகாட்டல்கள் கோரப்பட்டுள்ளன. அவர்களின் பச்சை சமிக்ஞை இன்றி தேர்தல் நடாத்தப்படாது. தேர்தலை நடாத்த முடியும் என சுகாதார அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்களாக இருப்பின், அது முதல் 9 முதல் 11 வாரங்களுக்குள் தேர்தலை நடாத்தலாம். 

தற்போதும், தேர்தலொன்றினை நடாத்துவதற்கான வழிகாட்டல்களை தயார் செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளரை ஆணைக்குழு கோரியுள்ளது. அந்த கோரிக்கை பிரகாரம் தற்போதும் வழிகாட்டல்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. அது குறித்த கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன.' என ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார். 

இதன்போது எழுந்த, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி சரித்த குணரத்ன சார்பில் முன்வைத்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் கோரப்பட்டுள்ளது, ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடாத்தப்போவதில்லை என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுதி ஊடாக கிடைத்துள்ளதாகவும் அதனால் எஸ்.சி.எப்.ஆர். 83/2020 எனும் தாம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை முன் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை என தெரிவித்தார். 

அதனை ஏற்றுக்கொண்ட பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலமையிலான ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழு, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனின் கோரிக்கைக்கு அனுமதியளித்தது. இதனூடாக சட்டத்தரணி சரித்த குணரத்னவின் அடிப்படை உரிமை மீறல் மனு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி ஏனைய 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதா இல்லையா என்பது குறித்தே உயர் நீதிமன்றம் ஆராய வேண்டியுள்ளது. 

இந்நிலையில் 6 அடிப்படை உரிமை மீறல் மனுக்களில், தேர்தல்கள் ஆணைக்குழு, அதன் தலைவர் மகிந்த தேசப்பிரிய, உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி நலின் அபேசேகர ஆகியோர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சொக்ஸி, மேலதிக வாதங்களை முன்வைத்தார். ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்த வர்த்தமானி சட்ட வலு உடையதா இல்லையா என்பதை ஆணைக்குழு ஆராயவோ தீர்மானிக்கவோ முடியாது எனவும், தேர்தல்கள் ஆணைக்குழு அதன் கடமையை சரிவர செய்துள்ளதாகவும் அவர் இதன்போது வாதிட்டார். 

'பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. அதனை தொடர்ந்தே தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்தது. தற்போதைய சூழலில் சுகதார அதிகாரிகள் தேர்தலை நடாத்த முடியும் என்ற உறுதியை வழங்கிய பின்னர் அதிலிருந்து 60 முதல் 75 நாட்களுக்குள் தேர்தல்கள் நடாத்தப்படும். இதுவே ஆணைக் குழுவின் தீர்மானம் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியதைப் போன்று ஜூன் 20 இல் தேர்தல் நடாத்தப்படமாட்டாது.' என தெரிவித்தார்

No comments:

Post a Comment