பெற்றோல் விலையை அதிகரித்தமைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

பெற்றோல் விலையை அதிகரித்தமைக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம்

(நா.தனுஜா) 

இலங்கை - இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் பெற்றோலின் விலையை அதிகரித்திருப்பது தவறு எனவும், இது குறித்து அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியிருக்கிறது. 

இது குறித்து நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய இயக்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (லங்கா ஐ.ஓ.சி) கடந்த 17 ஆம் திகதியிலிருந்து ஒரு லீற்றர் பெற்றோலின் விலையை 5 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது. அரசாங்கத்தினால் பெற்றோலுக்கான வரி அதிகரிக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

உலக சந்தையில் எரிபொருள் விலை பாரிய வீழ்ச்சி கண்டிருக்கும் நிலையில் இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் பெற்றோல் விலையை அதிகரிப்பது ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு விலையை அதிகரிப்பதால், பெற்றோலுக்கான கேள்வி குறைந்து, இலாபம் குறைவடையும். 

அவ்வாறிருக்கையில் பெற்றோல் விலையை அதிகரித்தமைக்கான காரணம் என்ன? இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் வெளிநாட்டுக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதன் ஊடாகப் பெருமளவு இலாபத்தை உழைக்குறது. எனவே அவர்களுக்கு உள்நாட்டு நுகர்வோரைப் பாதுகாக்க வேண்டிய அவசியமில்லை. 

எனவே எரிபொருளை அத்தியாவசியப் பொருளாக அறிவிப்பதுடன், அதன் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை நுகர்வோர் அதிகார சபையிடம் கையளிக்குமாறு வலியுறுத்தி நாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருக்கிறோம். அதேவேளை, இவ்விலை உயர்வு அநீதியானது என்பதுடன், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment