தனியார் எரிபொருள் விலை அதிகமென்றால் பெற்றோலிய வள கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களை நாடுங்கள் - அமைச்சர் பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Monday, May 18, 2020

தனியார் எரிபொருள் விலை அதிகமென்றால் பெற்றோலிய வள கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களை நாடுங்கள் - அமைச்சர் பந்துல குணவர்தன

(ஆர்.யசி) 

தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அதிக விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது என்றால் அவற்றை நிராகரித்துவிட்டு இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபன எரிபொருள் நிறைப்பு நிலையங்களை மக்கள் நாடுங்கள். அரசாங்கம் நிர்ணய விலையிலேயே எரிபொருள் வழங்குகின்றது என்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன. 

அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார். 

அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவுக்கு கொண்டுவந்த பின்னர் மிக வேகமாக நாடு வளர்ச்சி கண்டது. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஐக்கியமும் ஒற்றுமையும் உருவாகியது. நாட்டில் ஒரு மின் பிறப்பாக்கி கூட வெடிக்காத நாடாக இலங்கை மாற்றம் பெற்றது. 

2010 - 2014 ஆம் ஆண்டு காலம் இலங்கையின் பொற்காலம் என்றே கூற வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ யுகம் அவ்வாறான நன்மைகளை நாட்டுக்கு கொண்டுவந்தது. பொருளாதார வளர்ச்சி மிகவும் உயரிய மட்டத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் புரட்டிப்போடும் விதத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் நாட்டில் பல நாசகார வேலைகளை செய்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக கீழ் மட்டத்திற்கு வீழ்ச்சி கண்டது. 

இந்நிலையில் இப்போது எமது அரசாங்கதிற்கு முன்னாள் பிரதமர் பொருளாதார ஆலோசனைகளை வழங்கியுள்ளார். கடந்த காலத்தில் இவர்கள் ஆட்சியில் முன்வைக்காத யோசனைகளை, எமது ஆட்சியாளர்களால் பின்பற்றக்கூடிய ஆலோசனைகள் இருப்பின் அதனை நாம் கவனத்தில் கொள்ள தயாராக உள்ளோம். மேலும் எண்ணெய் விலை குறைப்பு குறித்து எமது அரசாங்கம் நிலையான திட்டமொன்றை உருவாக்கியுள்ளது. எரிபொருள் விலையில் மாற்றங்களை செய்யாது ஒரு நிர்ணய விலையில் கடைப்பிடிப்பதாகும். 

அதாவது உலக சந்தையில் கச்சாய் எண்ணெய் பீப்பாய்களின் விலை அதிகரித்தால் இலங்கையில் எண்ணெய் விலை அதிகரிக்காது. அதேபோல் கச்சாய் எண்ணையின் விலை குறைந்தால் அதன் சாதகத்தை அரசங்கம் பயன்படுத்திக் கொள்ளும், அதேபோல் மத்திய வங்கியில் இதற்கென உருவாக்கியுள்ள எரிபொருள், கணியெண்ணெய் தொடர்பிலான கணக்கில் இலாபங்களை சேமிப்போம், பெற்றோலிய கூட்டுத்தாபனம் பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது, மின்சார சபை பல கோடி ரூபாய்கள் கடனில் இயங்குகின்றது. இவற்றின் கடன்களை நாம் செலுத்தி முடித்தால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் கடன் இல்லாது செயற்பட முடியும். 

மக்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கும். தனியார் எரிபொருள் நிரப்பு நிலங்களில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றாலும் இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிர்ணய விலையில் எரிபொருள் வழங்கப்படுகின்றது. தனியார் நிறுவனங்கள் குறித்து எமக்கு எதனையும் கூற முடியாது. ஆனால் மக்களுக்கு ஆலோசனையாக ஒரு விடயத்தை கூற முடியும். தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலை அதிகமென்றால் இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment