(செ.தேன்மொழி)
கொவிட்-19 வைரஸ் பரவலை தடுப்பதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கமைய வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களை தனிமைப்படுத்தி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரும் நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதனால், இவர்கள் ஊடாக ஏனையவர்களுக்கு வைரஸ் பரவாதிருப்பதற்காக இதுவரை விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வைரஸ் பரவலை தடுப்பதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறை மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் பிரசன்ன ரணத்துங்க மற்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பார்வையிட்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, இந்நாட்டுக்கு அழைத்துவரப்படும் கொரோனா தொற்றாளர்களினால் விமான நிலையத்தில் சேவையில் ஈடுபட்டுவரும், விமான நிலைய உழியர்கள், சுங்கப்பிரிவினர், குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினர், விமான நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வைரஸ் பரவல் ஏற்படும் பட்சத்தில் அது சமூகத்தில் ஏனையவர்களுக்கும் பரவுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
இதனால் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை விமான நிலையத்துக்குள்ளேயே வைத்து பி.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றதா என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்த சுகாதார அமைச்சர், அதற்கான ஏற்பாடுகளை துரிதப்படுத்துமாறும் சுகாதார பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்போது இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரால் சஞ்சீவ முனசிங்க, விமான நிலைய சங்கத்தின் தலைவர் ஜே.ஏ.சந்ரசிரி மற்றும் சுகாதார பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் பலரும் இணைந்துக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment