(இராஐதுரை ஹஷான்)
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே எதிர்தரப்பினர் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள். நிதி அதிகாரத்தை ஜனாதிபதி செயற்படுத்துவதால் எவ்வித நெருக்கடிகளும் ஏற்படாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் பிரேமதாந் சி தொலவத்த தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் இடம்பெற்று புதிய அரசாங்கம் கூடும் வரையில் அரச நிர்வாகத்துக்கான நிதியை பயன்படுத்தும் அதிகாரம் அரசியலமைப்பின் 150(3) பிரிவின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கம் தோற்றம் பெற்று மூன்று மாத காலத்துக்கு நிதி தொடர்பான அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அதிகாரத்தை எதிர்தரப்பினர் பல்வேறுபட்ட வழிமுறைகளில் கேள்விக்குட்படுத்தி கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முயற்சிக்கின்றார்கள்.
பாராளுமன்றத்தை ஒருபோதும் கூட்டமாட்டேன் என ஜனாதிபதி பல முறை குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் நாளைமறுதினம் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் சமகி ஜனபல வேகய - மக்கள் விடுதலை முன்னணியினர் கலந்துகொள்ள போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்கள்.
பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்தரப்பினர் பொது நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடவில்லை. சுய அரசியல் நோக்கங்களை அடைவதற்காகவே அழுத்தம் கொடுக்கின்றார்கள். கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் பின்னர் பொதுத் தேர்தல் பாதுகாப்பான முறையில் நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment