ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட போதிலும் முழுமையான அனுமதி கிடைக்கவில்லை

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அங்கு முன்வைக்கப்பட்ட செயற்குழுவின் முழுமையான அனுமதி, கட்சி தலைவரின் அனுமதி மற்றும் சின்னம் என்ற மூன்று நிபந்தனைகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்று ஐக்கிய தேசிய கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவல்லவா அனுமதியளித்தது என்று ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

கேள்வி : 99 உறுப்பினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் ?

பதில் : இவ்வளவு காலம் ஏன் நீக்கப்படாமலிருந்தனர் என்றே முன்னர் வினவப்பட்டது. இதுவரை காலம் தொடர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதன் காரணமாக உரிய நவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தற்போது நாடு வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் செய்ய வேண்டியதை நாம் செய்துள்ளோம்.

கேள்வி : நீண்ட காலமாக திட்டமிட்டு இந்த நடவக்கை முன்னெடுக்கப்பட்டதா ?

பதில் : ஆழமாக சிந்தித்து எதிர்காலம் பற்றி யோசித்தே நாம் செயற்படுகின்றோம்.

கேள்வி : வேட்புமனுக்களை நீக்கி மீண்டும் ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் கூறப்பட்டதே ?

பதில் : நாம் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 291 வேட்பாளர்களைக் களமிறக்கியிருக்கின்றோம். அந்த வேட்பாளர்களை மக்கள் மத்தியில் வெற்றியடைச் செய்வதே எமது எதிர்பார்ப்பாகும். தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு அனைத்தும் நிறைவடைந்துள்ளது. ஏனைய கட்சிகளைப் போன்று வாக்களிக்கும் உரிமையை இல்லாமலாக்குவதற்கோ அல்லது காலம் தாழ்த்துவதற்கோ நாம் முன்வரவில்லை. எமக்கு வழங்கப்பட்ட உரிமையை வெற்றியடையச் செய்வதற்காக நாம் செயற்பட்டு வருகின்றோம். தற்போதுள்ளவர்களே எமக்கு தங்கம் போன்றவர்கள்.

கேள்வி : சஜித் தரப்பில் 99 உறுப்பினர்கள் இருக்கின்றார்களே ?

பதில் : 99 இல் 44 பேர் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர்களாவர். ஏனையோர் உள்ளுராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்றோறாவர். இந்த இரு மாத காலத்தில் இரு கட்சிகளும் செயற்படும் விதம் பற்றி மக்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.

கேள்வி : ஐக்கிய மக்கள் சக்தியை ஸ்தாபிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவல்லவா அனுமதியளித்தது?

பதில் : உங்களுக்கு கூறப்படுவது அல்ல கட்சிக்குள் நடப்பது. மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் போது மூன்று நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. செயற்குழுவின் முழுமையான அனுமதி, கட்சி தலைவரின் அனுமதி மற்றும் சின்னம் என்பனவாகும். இந்த மூன்று விடயங்களுக்கும் பதில் கிடைத்ததா ? சிலர் வெளியில் வந்து கருத்துக்களை கூறுகின்றார்கள் என்பதற்காக அதில் மாற்றம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment