நூறுல் ஹுதா உமர்
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே எந்த ஆதாரமுமின்றி மேற்கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தேசிய காங்கிரஸ் வேட்பாளர் றிஷாத் ஷரீப் தெரிவித்தார்.
மே 19 அன்று இலங்கைக்கு குவைத் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக தொலைக்காட்சி கலந்துந்துரையாடலொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே எந்த ஆதாரமுமின்றி மேற்கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் மனவருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
குவைத் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் பெரும்பான்மையானோர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அதை குவைத் அரசு திட்டமிட்டு மறைத்து அவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அது மட்டுமன்றி, அவர்களை கொரோனா மனிதக் குண்டுகளாக அந்த குறிப்பிட்ட கலந்துரையாடலில் அவர் சித்தரித்துள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய கூற்றாகும்.
குவைத் நாட்டிற்கான இலங்கை தூதுவர் அளித்த தகவலின்படி, இலங்கைக்கு திருப்பியனுப்பத்தெரிவு செய்யப்பட்டிருந்த 466 பேர் கொண்ட குழு மருத்துவப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர்களில் நான்கு பேர் நோய் அறிகுறிகளைக் கொண்டிருந்ததாகவும் அவர்கள் நால்வரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த நால்வரில் ஒரு நபர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இந்தத்தகவல்களை 'எத்தேரா அப்பி' எனப்படுகின்ற வெளிநாடுகளில் பணி புரிகின்ற இலங்கையர்களை கொண்ட அமைப்பின் குவைத் கிளையின் தலைவர் ஜூட் லிவேரா தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆளுங்கட்சியிலிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களத் தெரிவிப்பதன் மூலம் எமக்கு பாரியளவிலான அந்நியச்செலாவணியை ஈட்டித்தருகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற, இந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற எமது நாட்டு உறவுகளை மேலும் உள ரீதியாக காயப்படுத்துவது மட்டுமில்லாமல், இவ்வாறான கருத்துக்களின் மூலம் அவர்களுக்கு இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கின்றது.
குவைத் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை அரசுக்குள்ள இராஜாங்க உறவுகளில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதுடன், இதன் மூலம் அங்கு தொழில் நிமித்தம் வசிக்கின்ற இலங்கையர்கல் மேலும் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி வருமென்பதை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த சிந்தனையில் கொள்ள வேண்டுமென நான் வேண்டிக்கொள்கிறேன்.
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளுடன் பாராளுமன்றம் நுழைந்த மஹிந்தானந்த அளுத்கமகே முஸ்லிம்களுக்கெதிரான பல இனவாதக்கருத்துக்களையும் அண்மைக்காலமாகத் தெரிவித்து வருகின்றார் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
ஒரு இலங்கை குடிமகன் என்ற வகையில் இவ்வாறான இனவாதக் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதோடு, எமது நாட்டினுள் இனங்களுக்கிடையிலான விரிசல்கள் உருவாவதற்கு வழிகோலாது தமது அரசியல் பிரசாரங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நெருக்கடிகள் வராமல் செயற்படுமாறும், அது தாங்கள் சார்ந்திருக்கும் அரசுக்கு விரும்பத்தகாததாக இருக்குமென்றும் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment