அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 31, 2020

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் பூரண அரச மரியாதையுடன் இன்று பிற்பகல் 05.55 மணியளவில் அக்கினியுடன் சங்கமமாகியது.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பூரண அரச மரியாதையுடன் இறுதிக்கிரியைகள் முடிவடைந்த பின்னர், அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

கடந்த 26 ஆம் திகதி மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் அன்னாரது பத்தரமுல்ல இல்லத்தில் வைக்கப்பட்டு, பின்னர் கொழும்பு ஜயரட்ன மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பாராளுமன்றத்துக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. 

அதன் பின்னர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக் காரியாலயம் சௌமியபவனில் வைக்கப்பட்டு, அதனையடுத்து அவரது சொந்த ஊரான வெவண்டனுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் நுவரெலியா, தலவாக்கலை ஊடாக கொட்டகலைக்கு கொண்டு வரப்பட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயமான சி.எல்.எப் இல்வைக்கப்பட்டது.
கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில் இருந்து அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கிய பேழை இன்று பிற்பகல் 2 மணியளவில் நோர்வூட் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு மக்கள் கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

பொலிஸாரின் அனுமதியை பெற்றவர்கள் இன்று காலை முதல் உடலின் உஷ்ணத்தை அளவிட்ட பின்னர் அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

நோர்வூட் சௌமியமூர்த்தி தொண்டமான் விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி கிரியைகள் இடம்பெற்றன.
இதன்போது சமயத் தலைவர்கள் அன்னாரின் மறைவு தொடர்பில் இரங்கல் உரைகளையும் நிகழ்த்தினார்கள்.

மேலும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் விசேட இரங்கல் உரையும் இதன்போது வாசிக்கப்பட்டதோடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இரங்கல் உரை நிகழ்த்தினார்.

கொட்டகலை, அட்டன், டிக்கோயா,நோர்வூட், நகரங்கள் உட்பட பல இடங்களிலும் வௌ்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு, மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படத்தை வைத்து வழிநெடுகிலும் அஞ்சலி செலுத்தி வந்த மக்கள், அவரது பூதவுடல் தாங்கி வந்த ஊர்திக்கு வீதியில் இருபக்கமும் இருந்து மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

வீதியின் இருபுறமும் விசேட அதிரடிபடையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். பூதவுடல் தாங்கிய பேழையை வைத்து அஞ்சலி செலுத்துவதற்காக விசேட மேடை ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிகிரியைகள் இடம்பெற்ற நோர்வூட் தொண்டமான் விளையாட்டு மைதானத்தில் பலத்த சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சமூக இடைவெளியை பேணும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்ததுடன், பொதுமக்கள் எவரும் மைதானத்துக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

சர்வ மதங்களையும் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் மதகுருமார்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அதிகாரத்திலுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் ஏனைய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கும் மைதானத்துக்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பிரத்தியேக அனுமதி அட்டை விநியோகிக்கப்பட்டவர்கள் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தன. இதன்படி மைதானத்துக்குள் சுமார் 500 பேர் வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சுகாதார பிரிவினரால் அனைவரும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டதுடன் கிருமி தொற்று நீக்கியால் கைகளை சுத்தப்படுத்திக் கொண்டே உட்செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நோர்வூட் மைதானத்தில் இறுதிக்கிரியைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு தரப்பினருக்கான ஒத்துழைப்புகள் தொடர்பில் நோர்வூட் பிரதேச சபை தலைவர் குழந்தைவேல் ரவி பொறுப்புகளை ஏற்றிருந்தார்.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கிம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பாக முன்னாள் அமைச்சர் வி.இராதகிருஸ்ணன், முன்னாள் அமைச்சர்களான நிமால் சிரிபால டி சில்வா, விமல்வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே, ஜி.எ.பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்தகுமார், நவீன் திசாநாயக்க, சி.பி ரத்நாயக்க, நாமல் ராஜபக்ஷ மற்றும் மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைத் தலைவர்கள், உறுப்பினர்கள் நுவரெலியா மாவட்ட செயலாளர் புஸ்பகுமார, உட்பட சிவனொளிபாதமலை பிரதான தேரர், மற்றும் இந்து, கிருஸ்தவ, இஸ்லாமிய மதத்தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் கிருஸ்ணா

No comments:

Post a Comment