(செ.தேன்மொழி)
அரசாங்கமும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவர்களது இஷ்டத்திற்கு செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்க மாட்டோம் என்று சூளுரைத்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஸா விதானகே அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொள்ளாது ஜனநாயகத்தை மீறி செயற்பட்டால் மக்களின் நலனை காப்பதற்காக வீதியில் இறங்கவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு சூளுரைத்த அவர் மேலும் கூறியதாவது, கொவிட் - 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் தினந்தோறும் பேசி வந்தாலும், சில செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.
அரசாங்கம் வைரஸ் பரவலை தடுப்பதற்காகவோ, மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகவோ முறையான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தோன்ற வில்லை. கொரோனா நெருக்கடியிலும் அரசியல் இலாபம் கருதியே அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
வைரஸ் பரவல் தொடர்பில் உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடி நிலைமை தோற்றம் பெற்றுள்ளதை தெரிந்து கொண்டும் வேட்பு மனு தாக்கல் செய்யும் வரையில் விமான நிலையங்களை மூடாது திறந்து வைத்திருந்தனர். சுகாதார பிரிவினரின் முயற்சியினாலேயே இந்தளவேனும் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் ஒரு சில தீர்மானங்களின் காரணமாகவே வைரஸ் அதிகளவில் பரவிருந்தது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையிலும், சுகாதார அமைச்சர், வைத்தியர்கள் மூலம் நாட்டில் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காண்பித்துக் கொண்டு ஊரடங்கை தளர்த்த எடுத்த முயற்சியால் மேலும் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டார்கள். இதனை தேர்தலை நடத்துவதன் நோக்காக கொண்டே இவ்வாறான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர்.
சுகாதார பிரிவினர் வைரஸ் பரவல் தொடர்பில் எச்சரிக்கை செய்கின்ற போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் சிந்திப்பதாக தெரியவில்லை. இதேவேளை இராணுவத்தினரையும் பெரும் சிக்கலுக்குள் தள்ளிவிட்டுள்ளனர். அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கையற்ற செயற்பாடுகளினால் இன்று இராணுவத்தில் பலர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பரவலின் காரணமாக 60 இலட்சம் தொழிலாளர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு இலட்சம் தொழிலாளர்களின் தொழில் பரிபோகும் நிலையில் உள்ளது. இவர்கள் தொடர்பில் அரசாங்கம் முறையான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவில்லை. தற்போது எந்தவித பொருளாதார வசதியும் இன்றி பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்காக அரசாங்கம் முறையான செயற்பாடுகளை முன்னெடுப்பதில்லை.
இதேவேளை 5000 ரூபாய் பணத்தை நிவாரணமாக வழங்கி வருகின்றது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு 45 நாட்கள் கடந்துள்ள நிலையிலும் இந்த 5000 ரூபாய் நிவாரணம் அனைத்து மக்களையும் இதுவரையில் போய்ச் சேரவில்லை. இதனையும் அரசியல் தலையீட்டிலே பெற்றுக் கொடுக்கின்றனர். பெருந்தோட்ட மக்கள் பலருக்கு இதுவரையிலும் இந்த 5000 ரூபாய் நிவாரணம் கிடைக்கப் பெறாமல் உள்ளது. இதனை உரிய பகுதிகளின் மொட்டுக் கட்சியைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்களே இந்த பணத்தை பெற்றுக் கொடுப்பதில் இடையூறு விளைவித்து வருகின்றனர். பெருந்தோட்ட பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் பெரும்பாளும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக வாக்களித்துள்ளவர்கள் என்ற அடிப்படையிலேயே இவர்கள் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர்.
இதேவேளை 5000 ரூபாய் நிவாரணம் வேண்டும் என்றால் தமக்கு வாக்களிக்குமாறும் சாதாரண மக்களிடம் வாக்கு கொள்ளையிலும் ஈடுப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்த நிவாரணம் வழங்கும் செயற்பாடகளுக்கு அரசியல்வாதிகளை இணைத்துக் கொள்வதற்கு அவசியமில்லை.
கடந்த அரசாங்கத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அந்த பகுதிகளுக்கான நிவாரணப்பணம் ஒரு வாரத்தில் வழங்கப்பட்டது. இந்த செயற்பாடுகளை பிரதேச செயலாளர்கள் ஊடாகவே நிறைவேற்றினோம். அரசாங்கத்தின் பல பொறுப்புகளை நிறைவேற்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கொரோனா தடுப்பு செயலணியில் நியமித்துள்ளனர். அதற்கான தேவை என்ன? அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஒரு அமைச்சர் இருக்கும் போது அவர் தற்போது எங்கே? இதிலிருந்தே தெரிகின்றது அல்லவா. அவர்களது மோடித்தனமான செயற்பாடுகள் தொடர்பில், நாட்டுக்கு பெருந்தொகையான நிதிகள் கிடைக்கப் பெறுகின்றன.
இவற்றை நியாயமான முறையில் முகாமைத்துவம் செய்வதென்றால், பாராளுமன்றம் கூட வேண்டும். 225 மக்கள் பிரதிநிதிகள் இணைந்தே இந்த நிதி தொடர்பான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே நியாயமானது. இதன் காரணமாகவே பாராளுமன்றத்தை கூட்டுமாறு அனைத்து எதிர்கட்சிகளும் கோரிக்கை விடுத்துவருகின்றன. இதன்போது தமக்கு கொடுப்பனவு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கூட வேண்டாம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் ஏன் அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தை கூட்டுவதில் சிக்கல் ஏற்படுப்பொகின்றது. இந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது தொடர்பில் மக்களே சிந்தித்து முடிவெடுக்கட்டும்.
பாராளுமன்றத்தை கூட்டாமல் அலரி மாளிகைக்கு அனைத்து உறுப்பினர்களையும் வர வழைத்து என்ன கலந்துரையாடப் போகின்றனார்கள். பாராளுமன்றமும், அலரி மாளிகையும் சமமாக கருத முடியாது, பாராளுமன்றத்தில் செங்கோலுக்கு முன்னால் பேசுவதற்கும் அலரி மாளிகையில் உரையாடுவதற்கும் வேறுப்பாடுகள் இருக்கின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடியதாக இறப்பர் முத்திரையொன்றை தூக்கித்கொண்டு அரசாங்கமும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இஷ்டம் போல செயற்பட முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொடுக்க மாட்டோம். மக்களின் நலனை பாதுகாக்க வீதியில் இறங்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தில் சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிக்காமல் இருந்திருந்தால் அரசாங்கம் சடலங்களுக்கு மத்தியில் தேர்தலை நடத்தியிருக்கும். தேர்தல்கள் ஆணைக்குழு சுயாதீனமாக இயங்குவதன் காரணமாகவே மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தேர்தலை பிற்போட ஆணையாளர் தீர்மானித்தார். தொடர்ந்தும் அவர் அரசியல்வாதிகளின் கருத்துக்குச் செவிசாய்க்காமல் மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு, வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரையில் தேர்தலை பிற்போடுமாறும் தேர்தல்கள் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
No comments:
Post a Comment