வெலிப்பன்னை பிரதேசத்தில் ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது, இன்று (01) அதிகாலை களுத்துறை பிரிவிற்கான தீர்க்கப்படாத குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய வெலிப்பன்னை பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 700 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் காரில் சென்ற இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய, குறித்த பிரதேசத்தில் வாடகைக்கு எடுத்து இச்சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது, 300 கிராம் ஹெரோயின் மற்றும் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 09 மில்லி மீற்றர் வகை துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அத்தோடு ஹெரோயின் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் மோட்டார் சைக்கிளொன்றும் குறித்த வீட்டிலிருந்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பாணந்துறை, பண்டாரகம, மொரட்டுவை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 21, 27, 29 வயதுடைய சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இச்சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை களுத்துறை பிரிவிற்கான தீர்க்கப்படாத குற்றங்களை விசாரணை செய்யும் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment