மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் ஆபத்தில்லாத பிரதேசங்களில் ஆரம்பம் - அமைச்சர் மகிந்த அமரவீர - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 20, 2020

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் ஆபத்தில்லாத பிரதேசங்களில் ஆரம்பம் - அமைச்சர் மகிந்த அமரவீர

கொரோனா பரவல் காரணமாக, கடந்த இரு மாதங்களாக நாடெங்கும் அசாதாரண சூழ்நிலையே நிலவி வருகிறது. இந்நிலையில், ஆபத்தானவையாக கண்டறியப்பட்ட பிரதேசங்களைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் நடத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

கொவிட்-19 நெருக்கடி காரணமாக, சில கட்டுப்பாடுகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளை நடத்துமாறு சுகாதார அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த ஆலோசனைகளுக்கு அமைய சேவைகள் நடத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 

கோவிட்-19 கொரோனா வைரஸ் பரவுவதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட அரச மற்றும் தனியார் பஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்ஹா ஆகிய பகுதியைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் இன்று முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன் படி இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து, தனியார் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், வேலைக்கு செல்லும் அரச, தனியார் ஊழியர்களுக்கு மாத்திரமே பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியம் அற்ற தேவைகளுக்காக பொதுப் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்த இடமளிக்கப்படமாட்டாது. நிலைமை சீரடையும் பட்சத்தில், எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் பொதுப் போக்குவரத்து சேவைகளை வழமைக்குக் கொண்டு வரக்கூடியதாக இருக்குமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

ரயில் சேவையில், முன்பதிவு இன்றி அலுவலகம் நோக்கி பயணிக்கும் அரச, தனியார் ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பதிவுடன் கூடிய பயணிகளுக்கு வசதிகள் வழங்கும் முறை அமுலாக்கப்பட்டது. எனினும், 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பதிவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், ஒன்பதாயிரம் பேர் வரை மாத்திரமே ரயில்களில் பயணித்திருக்கிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி மாகாணங்களுக்கு இடையேயான பஸ்களை கொண்டு செல்ல இலங்கை போக்கு வரத்து சபை மற்றும் தனியார் போக்கு வரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று அதிக எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளன என்று இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment