மட்/மம/செம்மண்ணோடை அல்ஹம்ரா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றிய ஜனாப் எம்.எஸ்.சுபைதீன் அவர்கள் 41 வருட கால அரச சேவையிலிருந்து கடந்த ஏப்ரல் 07ம் திகதி ஓய்வு பெற்றார்.
1960.04.08ம் திகதி ஓட்டமாவடியில் புகழ்பெற்ற பத்திரிகையாளர் முஹம்மது சாலி அவர்களின் மகனாக பிறந்த சுபைதீன் அவர்கள் தனது உயர் கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரியில் கற்றுக்கொண்டிருக்கும் போதே அவரது 19 ஆவது வயதில் ஆசிரியர் நியமனம் பெற்று 23.10.1979 இல் விஞ்ஞான ஆசிரியராக பது/ஹப்புத்தளை தமிழ் மஹா வித்தியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அன்றிலிருந்து மாணவர்களின் கல்விக்காகவே தன்னை அர்ப்பணித்த அவர் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக மட்/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி, மட்/மீராவோடை அல் ஹிதாயா மஹா வித்தியாலயம் என்பவற்றில் கடமையாற்றினார்.
பின்னர் மட்/அல் ஹிதாயாவிலும், மட்/பிரைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்திலும் பிரதி அதிபராக கடமையாற்றி தொடர்ந்து பல வருடங்கள் பிரைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி இறுதியாக மட்/ செம்மண்ணோடை அல்ஹம்ரா வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
ஓய்வு பெறும் போது இலங்கை அதிபர் சேவையின் தரம் i (SLPS grade I) ஆக இருந்த சுபைதீன் அவர்கள் விஞ்ஞான பாடத்தை இப்பிரதேசத்தில் சிறப்பாக கற்பித்தவர் என்பதைப் போல பாடசாலை முகாமைத்துவத்திலும் சிறப்பாக இயங்கி ஏனையவர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
கடமையாற்றிய பாடசாலைகளில் மாத்திரமல்லாமல் ஏனைய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரதும் அன்பை பெற்றவர், அத்துடன் கல்வி அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் நன்மதிப்பை பெற்றவர்.
இவர் ஓய்வு நிலையை அடைந்தாலும் இவரது சேவையும் ஆலோசனைகளும் கல்குடா சமூகத்திற்கு என்றென்றும் தேவை. இவரது எதிர்காலம் மென்மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
எஸ். ஜவாஹிர் சாலி
முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்
No comments:
Post a Comment