குண்டுதாரிகளை அழைத்து விரிவுரை நடாத்திய குற்றச்சாட்டில் கற்பிட்டியைச் சேர்ந்தவர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, May 3, 2020

குண்டுதாரிகளை அழைத்து விரிவுரை நடாத்திய குற்றச்சாட்டில் கற்பிட்டியைச் சேர்ந்தவர் கைது

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று (03) பிற்பகல் குற்றப் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்றைய தினம் புத்தளம் - கற்பிட்டி, 4 ஆம் குறுக்குத் தெரு பகுதிக்கு சென்ற சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு குறித்த நபரை அவரது வதிவிடத்தில் வைத்து பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ததாகவும், கைது செய்யப்பட்ட நபர் சி.ஐ.டி. தலைமையகமான 4 ஆம் மாடிக்கு அழைத்துவரப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

கற்பிட்டியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், தாக்குதல்தாரிகளை அழைத்து வந்து, தான் பொறுப்பாகவுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பயிற்சி நிலையத்தில் விரிவுரை நடாத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவரை கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர், குண்டுதாரிகளின் அடிப்படைவாதத்தை குறித்த பயிற்சி முகாமில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரவித்தார்.

குறித்த பயிற்சி நிலையம், அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பெயரில் உள்ளதாக தெரிவித்த அவர், குறித்த சந்தேகநபர் அப்பயிற்சி நிலையம் மற்றும் குறித்த அரச சார்பற்ற நிறுவனம் ஆகியவற்றின் பொறுப்பாளராக செயற்பட்டு வந்துள்ளதாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

1 comment: