(எம்.எப்.எம்.பஸீர்)
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், தமது இருப்பிடங்களுக்கு செல்ல முடியாமல் மேல் மாகாணத்தில் சிக்கியுள்ளவர்களை அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன.
அதில் முதல் கட்டமாக மேல் மாகாணத்தின் களனி பொலிஸ் பிரிவில் இவ்வாறு சொந்த இடங்களுக்கு செல்ல முடியாமல் இருந்த 370 பேர் இன்று பொலிஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டனர்.
மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழி நடாத்தலில், இன்று காலை 7.30 மணிக்கு பேலியகொடை பகுதியில் உள்ள விஜய குமாரதுங்க மைதானத்தில் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த 370 பேரும், காலை உணவு வழங்கப்பட்டு மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர், தொற்று நீக்கல் செய்யப்பட்டு இ.போ.ச. பஸ் வண்டிகளில் அவரவர் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இன்று இவ்வாறு அனுப்பப்பட்ட 370 பேரில் கர்ப்பிணிகள், சிறுவர்கள், நீண்ட நாள் உபாதைகளால் அவதியுறுவோர் உள்ளிட்டோர் உள்ளடங்குவதாகவும் அவர்களுக்கு வைத்திய பரிசோதனைகளை முன்னெடுத்த பின்னர் இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், மேல் மாகாணத்தின் வடக்கு பிராந்திய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
முதல்கட்டமாக வீடுகளுக்கு அனுப்பப்படும் குறித்த 370 பேரும் பொலிஸ் பாதுகாப்புடன் இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளில், 23 மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டடினார்.
உரிய பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்களுக்கு அனுப்பப்பட்ட அவர்கள் அங்கு சென்று 14 நாட்கள் வீடுகளுக்குள் தனிமையாக இருக்கவும் உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகள் பொலிஸ் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இந்நிலையில் இதன் 2 ஆம் கட்டமாக நுகேகொடை பொலிஸ் வலயத்தில் அல்லலுறும் பொதுமக்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்துள்ள கணிப்பீட்டின் பிரகாரம், ஊரடங்கால் சிக்கியுள்ள வெளிமாவட்டத்தை சேர்ந்தோர் 51, 868 பேர் இருப்பதாக அறிய முடிகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment