ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்பில் தீ : 9 வீடுகள் முற்றாக தீக்கிரை - News View

About Us

About Us

Breaking

Saturday, May 2, 2020

ஹட்டன் எபோஸ்லி தோட்டத்தில் 14 வீடுகளைக் கொண்ட குடியிருப்பில் தீ : 9 வீடுகள் முற்றாக தீக்கிரை

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோஸ்லி தோட்டத்தில் 14 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் இன்றிரவு (02) 7 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 09 வீடுகள் முற்றாக எரிந்து தீக்கிரையாகின. மேலும் 05 வீடுகளுக்கு பகுதியளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால் 50 இற்கும் மேற்பட்டவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களை சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உரிய இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

குறித்த தோட்டத்தில் கோவிலுக்கு அருகிலுள்ள நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள் இருக்கையில் திடீர் தீபரவல் ஏற்பட்டதால் மக்கள் பதறியடித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு ஓடிவந்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும், தீயணைப்பு பிரிவினருக்கும் தகவல் வழங்கப்பட்டது. இதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்த அட்டன், டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர், மக்களுடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினர்.

இதற்கிடையில் அப்பகுதியில் மக்கள் குவிந்ததால், சமூக இடைவெளியை பின்பற்றி உரிய வகையில் இருக்குமாறு பொலிஸாரால் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும், பெருமளவில் பொருட் தேசங்கள் ஏற்பட்டுள்ளன. வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபபடவில்லை. பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

(கே. கிஷாந்தன், எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment