கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை உறுப்பினர் ஐ.டி.எச் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி கொவிட்-19 நோய்த் தொற்று இருப்பது அடையாளம் காணப்பட்ட நிலையில் ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குறித்த கடற்படை வீரர், நேற்றையதினம் (மே 03) குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி முதல் விடுமுறையில் இருந்த நிலையில், வெலிசறை கடற்படை முகாமில் கொரோனா நோய்த் தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 25ஆம் திகதி இரத்தினபுரி வைத்தியசாலையில் பி.சி.ஆர். (PCR) பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவருக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் அதே நாளில் சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு, மருத்துவமனையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட மூன்று பி.சி.ஆர் சோதனைகள் வைரஸ் அவரது உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நேற்று (03) மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்.
குறித்த கடற்படை வீரர் மருத்துவமனையை விட்டு வெளியேறிய போதிலும், சுகாதார ஆலோசனையின் பேரில் மேலும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குட்படுத்த, கடற்படையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவரது குடும்ப உறுப்பினர்கள் பூசா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment