புதிய பாராளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் ஆசன ஒதுக்கீடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 26, 2020

புதிய பாராளுமன்ற அமர்வில் 125 உறுப்பினர்களுக்கே சபைக்குள் ஆசன ஒதுக்கீடு

(ஆர்.யசி) 

புதிய பாராளுமன்றம் கூடிய பின்னர் ஒரே நேரத்தில் சபையில் 125 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் அமரக்கூடிய வகையில் இடங்களை ஒதுக்குவதற்கான ஆலோசனையொன்றை சிரேஷ்ட வைத்திய அதிகாரிகளினால் முன்வைக்கப்பட்டுள்ளது. 

கொவிட்-19 தொற்று நோய்க்கு மருந்தொன்று கண்டுபிடிக்கும் வரையில் இவ்வாறனதொரு நடவடிக்கை முன்னெடுப்பது ஆரோக்கியமனதாக அமையும் எனவும் ஆராயப்பட்டுள்ளது. 

கொவிட்-19 ஜனாதிபதி செயலணி, பாராளுமன்ற செயலாளர், அரச அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் மட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இவ்வாறான யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. 

அதாவது பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்றம் கூடும் நிலையில் சபையில் 225 உறுப்பினர்களையும் அமர்த்துவது ஆரோக்கியமான விடயமல்ல என்பதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள அதேவேளை சபையில் ஒரே சந்தர்ப்பத்தில் 125 உறுப்பினர்கள் அமரக்கூடிய வகையில் சபையில் மாற்று ஆசன ஒதுக்கீட்டு ஏற்பாடுகள் செய்வது ஆரோக்கியமானது எனவும் ஏனைய 100 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கென பாராளுமன்ற கட்டிட தொகுதியில் ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், குழு அறைகள் போன்றவற்றில் அமர முடியும் எனவும் யோசனை ஒன்றினை முன்வைத்துள்ளனர். 

அதேபோல் புதிய வசதிகள் மூலமாக பாராளுமன்ற குழு அமர்வுகளை நடத்த முடியுமா என்பது குறித்தும், தேவைப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கையடக்க தொலைபேசிகளின் மூலமாக அல்லது மாற்று இணைய தொழில்நுட்பம் வழிமுறைகளை பயன்படுத்தி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும் என்பது குறித்தும், ஆராயப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இன்றும் அவ்வாறான இணைய வழிமுறைகளில் குழு கூட்டங்களில் உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்கின்றனர், அது சாதகமாக அமைந்துள்ளது என்ற உதாரணகளையும் பாராளுமன்ற நிருவாகக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த காரணிகள் குறித்து பாராளுமன்ற கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி இந்த ஆலோசனைகளுக்கான அங்கீகாரம் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டும் அல்லாது, பாராளுமன்ற அமர்வுகளில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்களுக்கு எவ்வாறான சமூக இடைவெளியை ஏற்படுத்திக்கொடுப்பது, கோப் குழு மற்றும் ஏனைய அங்கீகாரம் பெற்ற குழுக்களில் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நெருக்கடி இல்லாது செய்தி சேகரிப்பது என்பது குறித்தும், பாராளுமன்ற அமர்வுகளை பார்வையிட வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை எவ்வாறு கடைப்பிடிக்க வலியுறுத்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment