கல்முனை எக்டோவில் (ECDO) இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரத்திற்கு தெரிவு! - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 29, 2020

கல்முனை எக்டோவில் (ECDO) இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் உயர்தரத்திற்கு தெரிவு!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

எக்டொ (ECDO) என்று அழைக்கப்படும் கல்முனை கல்வி கலாச்சார மேம்பாட்டு தாபனத்தின் கீழ் இயங்கிவரும் அப்துல் கபூர் ஞாபகார்த்த கல்லூரியானது கடந்த ஒரு தசாப்த காலமாக வசதி குறைந்த மாணவர்களுக்கென முற்றிலும் இலவசமாக மேலதிக வகுப்புகளை நடாத்தி வருகின்றது.

இக்கல்லூரியில் கல்வி பயின்று கடந்த வருடம் (2019) கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதிய தாஹிர் பாத்திமா தஹ்ஸின் என்னும் மாணவி 9A சித்திகளை பெற்று கல்லூரிக்கும் எம்பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும், இக்கல்லூரியிலிருந்து பரீட்சைக்கு தோற்றிய பெரும்பாலான மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதுடன் அனைத்து மாணவர்களும் உயர்தரம் கற்கும் தகுதியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக இத்தாபனத்தில் பிரதான கல்வி சேவையாக இப்பிராந்திய மாணவர்கள் பொதுமக்கள், வாசகர்கள் கற்பதற்கு ஏதுவாக தனது நிரந்தர கட்டிடத்தொகுதியில் வாசிகசாலையை அமைத்து அதில் சுமார் 1900 அங்கத்தவர்கள் அடங்கலாக 10000 க்கும் மேற்பட்ட நூல்களை தன்னகத்தை வைத்து கல்வி சேவையினை வழங்கி வருகின்றது.

அத்தோடு இக்கட்டிடத் தொகுதியின் முதலாம் தளத்தில் வசதி குறைந்த தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவ மற்றும் மாணவிகளுக்கு முற்றிலும் இலவச மேலதிக கல்வியினை வழங்கி வருகின்றது.

மேலும், இக்கல்லூரியில் அன்றாடம் கல்வி கற்பதற்காக மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கல்வி நடவடிக்கைக்காக இக்கட்டிடத் தொகுதியின் இரண்டாம் தளத்தையும் நிர்மாணித்து மேலும் விஸ்தரிக்கும் வகையில் அதிலும் இலவசமாக மேலதிக கல்வி சேவையினை வழங்கும் நோக்கில் கட்டிடத்தின் மேற்தளத்தை நிர்மாணிக்க தேவையான நிதியை சேகரிக்கும் முயற்சியில் இத்தாபனத்தின் நிருவாகிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், கல்வி மற்றும் கலாச்சார மேம்பாட்டு தாபனமானது கடந்த 20 வருடங்களாக கல்முனை பிராந்தியத்தில் இலவச கல்வி, நூலக செயற்பாடு மற்றும் சமூக சேவை பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப் பெறுபேற்றுக்காய் இக்கல்லூரியில் சேவையாற்றிய அனைத்து ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் இத்தாபனத்தின் நிருவாகிகள் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment