நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் தமது அரசியல் நலன்களை அடைந்துகொள்ள முயற்சி - தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

நிவாரணங்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளில் வேட்பாளர்கள் தமது அரசியல் நலன்களை அடைந்துகொள்ள முயற்சி - தேர்தல் கண்காணிப்பு குழுக்கள்

(நா.தனுஜா) 

பொதுமக்களுக்கு நிவாரணங்களைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டின் ஊடாக பல வேட்பாளர்கள் தமது அரசியல் நலன்களை அடைந்துகொள்ள முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்விடயத்தில் எவ்வித அரசியல் மற்றும் தேர்தல் நோக்கங்களும் அற்றவகையில், அரசியல்வாதிகளின் தலையீடின்றி நிவாரணப் பொருட்கள் பகிரப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. 

தேர்தல் கண்காணிப்புக் குழுக்களான பெப்ரல் அமைப்பு மற்றும் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் என்பன இணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது இதுவரை காலமும் இல்லாத வகையிலான புதிய சவால் ஒன்றை இலங்கை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாமனைவரும் எவ்வித பேதங்களுமின்றி அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. நாடு என்ற வகையில் இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்கான சரியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக நாம் நம்புகின்றோம். 

அதேவேளை தற்போதைய சூழ்நிலையில் நிவாரண உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவுவதும் மிகவும் அவசியமானதாகும். அதற்காக அரசாங்கத்தினால் பல்வேறு செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. 

அதேவேளை இம்மாதம் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த பொதுத் தேர்தல்கள் பிற்போடப்பட்டுள்ள நிலையிலும் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் இன்னமும் செல்லுபடியாகும் நிலையிலேயே உள்ளன. 

எனவே தற்போது நிவாரணங்களைப் பகிர்ந்தளிக்கும் செயற்பாட்டின் ஊடாக பல வேட்பாளர்கள் தமது அரசியல் நலன்களை அடைந்துகொள்ள முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

தற்போதைய நெருக்கடி நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் செயற்பாட்டை தமது தனிப்பட்ட அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. 

எனவே இந்த நிவாரண வழங்கள் செயற்பாடுகள் உரிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக மாத்திரம் இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும். 

இவ்விடயத்தில் எவ்வித அரசியல் மற்றும தேர்தல் நோக்கங்களும் அற்ற வகையில் அரசியல்வாதிகளின் தலையீடின்றி நிவாரணப் பொருட்கள் பகிரப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment