(எம்.மனோசித்ரா)
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதன் மூலம் கடந்த இரு மாதங்களாக கிடைக்கப் பெறாமலுள்ள சம்பளம், கொடுப்பனவுகள் உள்ளிட்ட வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதே ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நோக்கமாகும் என்று பிவிதுரு ஹெலஉருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பான சட்டதிட்டங்களில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் பாராளுமன்றத்தைக் கூட்டுவது அவசியமாகும். ஆனால் இவ்வாறாக நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் போதுமானதாகவுள்ளதாக ஜனாதிபதி எண்ணுவதாகவும் உதய கம்பன்பில மேலும் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான இரு சந்தர்ப்பங்கள் மாத்திரமே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
அவற்றில் முதலாவது அரசியலமைப்பில் 155 ஆவது உறுப்புரையாகும். அதில் ஜனாதிபதியால் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்படுமானால் அவசரகால சட்டத்தை பிறப்பிக்கும் அறிவித்தலே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அறிவித்தலாக அமையும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பிற்காக கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கிறார். எனவே அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவது அவசியமற்றது. அவ்வாறு அவசரகால சட்டம் பிறப்பிக்கப்படமாட்டாது என்பதையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
அவசர காலம் சட்டத்தை பிறப்பிக்காது கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கூட்டும் சட்ட ரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு எந்த சந்தர்ப்பத்திலும் கிடையாது. மாறாக இந்த அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்று கூறுபவர்கள் அது பற்றி அரசியலமைப்பில் எந்த சந்தர்ப்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை எமக்கு தெளிவுபடுத்துமாறு கோருகின்றோம்.
இரண்டாவது சந்தர்ப்பம் அரசியலமைப்பின் 70 உறுப்புரையில் (7) ஆம் உப உறுப்புரையாகும். அதில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தைக் கூட்டும் வகையில் அவசர நிலைமை நாட்டில் ஏற்பட்டுள்ளது என்று ஜனாதிபதிக்கு தோன்றினால் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட முடியும்.
உண்மையில் தற்போதுள்ள நிலைமையில் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமானால் வைரஸ் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளில் ஏதேனும் சட்ட சிக்கல் காணப்பட்டிருக்க வேண்டும்.
நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம், மக்கள் பாதுகாப்பு சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம், அனர்த்த முகாமைத்துவ சட்டம் உள்ளிட்டவை தொடர்பாக பாராளுமன்றத்தில் இதுவரையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்கள் வைரஸ் ஒழிப்பிற்கு போதுமானவையாகவுள்ளன என்று ஜனாதிபதி எண்ணுகின்றார்.
அதேபோன்று இதற்காக புதிதாக நிறைவேற்றப்பட வேண்டிய எந்த சட்டமும் ஜனாதிபதியிடம் இல்லை. தேவையான அனைத்து சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வாறிருக்கையில் ஏன் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகின்றனர் ? கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதா இல்லையா என்று தீர்மானிக்கக் கூடிய அதிகாரமுடைய ஒரே நபர் ஜனாதிபதி மாத்திரமேயாவார்.
முன்னாள் சபாநாயகருக்கோ நீதிமன்றத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ யாருக்கும் அந்த அதிகாரம் கிடையாது. மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய தேவை இல்லை என்று ஜனாதிபதி எண்ணுகின்ற சந்தர்ப்பத்தில் நிச்சயமாக பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி கோருவதற்கான காரணம் என்ன ?
ஒரு நாள் மாத்திரம் பாராளுமன்றம் கூட்டப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வரப்பிரசாதங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். இரு மாதங்களாக தமக்கு கிடைக்கப் பெறாமல் போயுள்ள சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கத்திலேயே ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றனர் என்றார்.
No comments:
Post a Comment