வுகானில் இரண்டு மாதங்களிற்கு முன்னர் காணாமல் போன பத்திரிகையாளர் திரும்பி வந்தார் - காவல்துறையினர் தனிமைப்படுத்தி வைத்தனர் என தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 22, 2020

வுகானில் இரண்டு மாதங்களிற்கு முன்னர் காணாமல் போன பத்திரிகையாளர் திரும்பி வந்தார் - காவல்துறையினர் தனிமைப்படுத்தி வைத்தனர் என தெரிவிப்பு

இரண்டு மாதங்களிற்கு முன்னர் வுகானில் காணாமல்போன பத்திரிகையாளர் மீண்டும் திரும்பி வந்துள்ளதுடன் தன்னை காவல்துறையினர் பலவந்தமாக தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார். 

வுகான் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகியிருந்தவேளை அங்கிருந்து செய்திகளை வெளி உலகிற்கு தெரியப்படுத்திய மூன்று பத்திரிகையாளர்களில் ஒருவர் லீ ஜெகுவா. 

பெப்ரவரி 26ம் திகதி நீண்ட நேர நேரடி ஒளிப்பரப்பிற்கு பின்னர் தன்னை வாகனமொன்றில் நபர்கள் துரத்தும் வீடியோவை பதிவு செய்த பின்னர் லீ காணாமல் போயிருந்தார். 

சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோவில் வுகானின் வுச்சாங் என்ற பகுதியில் தனது வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தவேளை தனது வாகனத்தின் முன்னாள் வாகனமொன்று வந்து நின்றதாகவும் அதிலிருந்தவர்கள் தன்னை வாகனத்தை நிறுத்துமாறு சத்தமிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார். 

எனினும் தான் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செலுத்தியதுடன் அதனை பதிவு செய்து வெளியிட்டதாகவும் லீ தெரிவித்துள்ளார். 

நான் எனது தொடர்மாடிக்கு எனது அயல் வீடுகளின் கதவுகளை சீருடை அணிந்த காவல்துறையினரும் முகக் கவசம் அணிந்தவர்களும் தட்டிக் கொண்டிருப்பதை பார்த்தேன், நான் எனது வீட்டின் மின் விளக்குகளை அணைத்து விட்டு அமைதியாக அமர்ந்திருந்தேன் மூன்று மணித்தியாலங்களின் பின்னர் எனது வீட்டின் கதவும் தட்டப்பட்டது என லீ தெரிவித்துள்ளார். 

தங்களை பொது பாதுகாப்பு பிரிவை சேர்ந்தவர்கள் என அறிமுகப்படுத்தி மூவர் எனது வீட்டிற்குள் நுழைந்தனர், அதன் பின்னர் நான் அவர்களுடன் உள்ளுர் பொலிஸ் நிலையத்திற்கு சென்றேன், அங்கு பொது ஒழுங்கிற்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் என்னை விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்தனர் என லீ குறிப்பிட்டுள்ளார். 

எனினும் காவல்துறையினர் பின்னர் எனக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தப் போவதில்லை எனவும் ஆனால் பாதுகாப்பற்ற இடங்களிற்கு நான் சென்றதால் என்னை தனிமைப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தனர் என லீ குறிப்பிட்டுள்ளார். 

அடுத்த இரண்டு மாதங்களும் தன்னை வுகானிலும் வேறு பகுதிகளிலும் தன்னை தனிமைப்படுத்தி வைத்திருந்ததாகவும் தனக்கு உரிய விதத்தில் உணவு வழங்கப்பட்டதாகவும், தெரிவித்துள்ள லீ காவல்துறையினர் தன்னை நடத்திய விதத்தினை பாராட்டியுள்ளார். சீனாவை இறைவன் ஆசீர்வதிக்கட்டும் உலக மக்கள் ஐக்கியப்படட்டும் என அவர் தெரிவித்துள்ளார். 

எனினும் அவரின் நடுநிலைமையான தேசப்பற்று தொனியை கொண்ட கருத்துக்கள் முன்னைய அவரது தொனியிலிருந்து வேறுபட்டவையாக காணப்படுகின்றன என கார்டியன் சுட்டிக்காட்டியுள்ளது. 

தனது முன்னைய வீடியோக்களில் நோய் பரவலை மறைப்பதற்கான உள்ளுர் நிர்வாக குழுக்களின் முயற்சிகளை அவர் விமர்சித்திருந்தார், பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர் பேட்டி கண்டார் என கார்டியன் தெரிவித்துள்ளது. 

உடல்கள் எரியூட்டப்படும் பகுதியொன்றிற்கும் அவர் சென்றிருந்தார். அவ்வேளை அவர் நான் மௌனமாகயிருக்கவோ அல்லது எனது கண்களையும் காதுகளையும் மூடிக்கொள்ளவோ விரும்பவில்லை என குறிப்பிட்டிருந்தார். என்னை போல இளைஞர்கள் இந்த அநீதிகளை எதிர்கொள்வார்கள் என்பதற்காகவே இதனை செய்கின்றேன் என அவர் குறிப்பிட்டிருந்தார். 

எனினும் தனது புதன்கிழமை வீடியோவில் லீ தனது நம்பிக்கைகளிற்கு விசுவாசமாகயிருப்பது குறித்த ஜென் தத்துவமொன்றை பகிர்ந்துகொண்டுள்ளார். மனித இதயம் எதிர்வுகூற முடியாதது, அமைதியற்றது, எது சரியானது என்பதை கண்டுபிடிப்பதற்கான அதன் தொடர்பு சிறியது, பாகுபாடு காட்டுங்கள், ஒரே நிலையில் இருங்கள், இதனால் உங்கள் நம்பிக்கைகளை நீங்கள் உறுதியாக பற்றிக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment