கொரோனாவை காரணம் காட்டி, ஒப்பந்த விதிகளை மதிக்க தவறினால் சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொருளாதாரத்தில், உலகின் முன்னணி நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் கடந்த 2 ஆண்டுகளாக வர்த்தக போரில் ஈடுபட்டு வந்தன. ஒருவரது பொருட்கள் மீது மற்றவர் கூடுதல் வரி விதித்தன.
36 ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது.
அதற்கு பதிலடியாக, 11 ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால், சந்தையில் தடுமாற்றம் ஏற்பட்டது. உலக பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டது.
இதனால், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கிடையிலான கசப்புணர்வை மறந்து கடந்த ஜனவரி மாதம் ஒரு வர்த்தக பேரத்தின் முதல்கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, அமெரிக்காவிடம் இருந்து 20 ஆயிரம் கோடி டொலர் மதிப்புள்ள பொருட்களை சீனா வாங்க வேண்டும்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் காரணமாக, உலக பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது. இதுபோன்ற எதிர்பாராத சம்பவங்களோ, இயற்கை சீற்றங்களோ நடக்கும்போது, அதற்கேற்ப மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறை உள்ளது.
கொரோனா காரணமாக, இந்த விதிமுறையை சீனா பயன்படுத்தக்கூடும் என்று அமெரிக்க-சீன பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வு ஆணையம் கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வெள்ளை மாளிகையில் பேட்டி அளித்தபோது, இதுகுறித்து கேட்கப்பட்டது.
அதற்கு டிரம்ப் கூறியதாவது சீனா அப்படி செய்தால், சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவேன். மற்றவர்களை விட என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்வோம். சீனாவிடம் என்னை விட கடுமையாக நடந்து கொள்பவரை பார்க்க முடியாது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.
No comments:
Post a Comment