தேர்தலை எதிர் கொள்ளக்கூடிய மனநிலையில் இன்று மக்களில்லை - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு - News View

About Us

About Us

Breaking

Thursday, April 23, 2020

தேர்தலை எதிர் கொள்ளக்கூடிய மனநிலையில் இன்று மக்களில்லை - ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

தேர்தல் ஆணையாளரின் தலைமையில் சகல கட்சிகளுக்குமான கூட்டம் 2020.04.21ம் திகதியன்று தேர்தல் ஆணையாளர் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பிரதித் தலைவர் அக்பர் அலியும் பொருளாளர் ஐ.ஏ.கலீலுர் ரகுமானும் கலந்து கொண்டனர்.

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு 2020.03.19 ம் திகதியன்று தாக்கல் செய்யப்பட்டது முதல் எதிர்வரும் 2020.06.20ம் திகதிக்குள் அல்லது மூன்று மாத காலப்பகுதிக்குள் அல்லது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தல் நடாத்தப்படாத பட்சத்தில், சிலவேளை தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் செல்லுபடி அற்றதாகி, புதிய வேட்புமனுக்கள் கோரப்படலாம். 

ஆனால் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் தேர்தலினை நடாத்த முடியாத சூழ்நிலை காணப்படுவது தெளிவு எனின் கலைத்த பாராளுமன்றத்தை கூட்ட வேண்டிய அவசியம் ஏற்படும், இதற்கு மேலாக பாராளுமன்றத்தை மீண்டும் ஜனாதிபதியாலும் கூட்ட முடியும். என்வே இவைகள் இக்காலப்பகுதியில் காணப்படும் அரசியல், சட்ட சிக்கல்களாக கானப்படும். இந்நிலைப்பாடு ஒரு சாராருக்கு சாதகமாகவும், இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் அமையலாம். 

ஆனால் தேர்தல் ஆணையாளர் காணப்படும் சட்டத்தினை அமுலுக்கு கொண்டு வருவதோடு, நடக்கும் தேர்தலுடன் தொடர்புடைய தபால், போக்கு வரத்து, அச்சகம் போன்ற அரச நிறுவனங்களின் செயற்பாடுகளையும் கவனத்தில் கொள்வார்.

இச்சூழ்நிலையானது சில கட்சிகளுக்கு சாதகமாகவும், சில கட்சிகளுக்கு பாதகமாகவும் அமைய வாய்ப்புள்ளது. மேலும் இத்தேர்தலினை நடத்துவதற்கான திகதி 2020.06.20 என மேலோட்டமாக பேசப்பட்டாலும், அதற்கான சாத்தியப்பாட்டினை நாட்டில் காணப்படும் கொரோனா நோய்த்தாக்கத்தின் தன்மையே தீர்மானிக்கும். 

இம்மாதம் 27ம் திகதியில் இருந்து 30ம் திகதிக்குள் தேர்தல் ஆணையத்தால் கலந்தாலோசித்து மே மாதம் முதலாவது வாரத்தில் கூட்டப்பட இருக்கும் சகல கட்சிகளுக்கான கூட்டத்தில் இத்தேர்தல் தொடர்பான தீர்மானத்தினை அறிவிப்பதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதன் பிரகாரம் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு அதன் உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேர்தலினை நடாத்துவது தொடர்பான விடயங்களை அல்லது காலத்தினை நிர்ணயிக்கும் வகையில் எமது கட்சியின் தீர்மானத்தினை தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவிக்க கட்சியின் செயலாளர் நாயகம் எம்.டி.ஹசனலி நடவடிக்கை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

தற்போது நாட்டில் காணப்படுகின்ற கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் தேர்தலினை நடாத்தி கட்சிகளின் செல்வாக்கினையும், அதிகாரத்தினையும் காண்பிக்க முயல்வோமாயின், அதற்கு முன் கொரோனா நோயின் தாக்கமானது நாட்டை தாக்கி ஆட்சி செய்து காண்பித்து விடும்.

தேர்தல் சட்டங்களும், அதற்கான செயற்பாடுகளும் மக்களுக்காகவே தவிர, இவற்றுக்காக மக்களல்ல என்பதனை சகலரும் உணர்ந்து செயற்பட வேண்டிய ஒரு காலப் பகுதியில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம்.

எனவே நாட்டு மக்கள் பூரணமாக கொரோனா நோய்த் தாக்கத்தில் இருந்து விடுபட்டதன் பிற்பாடு தேர்தலுக்குள் செல்வதனையே ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் விரும்புகிறது என்பதுடன் இவ்விடயத்தில் மக்களை நோக்கிய பார்வையில் மிகவும் தெளிவாகவும், உண்மையாகவும் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது.

ஐ.எம். ஹாரிப்
பிரச்சாரச் செயலாளர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு

No comments:

Post a Comment