எதிர்வரும் வாரங்கள் மிக அச்சுறுத்தலாக அமையும் : கருத்திலெடுத்து செயற்படுமாறு மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்...! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

எதிர்வரும் வாரங்கள் மிக அச்சுறுத்தலாக அமையும் : கருத்திலெடுத்து செயற்படுமாறு மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள்...!

(ஆர்.யசி) 

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் கூட அடுத்த வாரங்களில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் மோசமானதாக அமையலாம் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதால் அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது என்கிறது அரசாங்கம். 

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு பின்னர் உலகில் ஏற்பட்டுள்ள மிகவும் மோசமான பாதிப்பாக கொரோனா வைரஸ் பரவல் உருவாகியுள்ளது. உலகின் பலம்மிக்க நாடுகள், செல்வந்த நாடுகள் என அனைத்தையுமே நாசமாக்கும் விதத்தில் கொரோனா வைரஸ் பரவல் அமைந்துள்ளது. 

அவ்வாறான நிலையில் எமது நாட்டிலும் அதற்கான தாக்கம் உள்ளது. எனினும் ஜனாதிபதியின் தீர்மானங்களுடன் எமது வைத்திய, பாதுகாப்பு துறையின் உதவியுடன் நிலைமைகளை கையாள முடிந்துள்ளது. 

எனினும் எதிர்வரும் வாரங்களில் நிலைமைகள் மிகவும் அச்சுறுத்தலான நிலைமை உருவாக்கும் என்றே சுகாதார துறை அறிவுறுத்தி வருகின்றனர். எனவே அடுத்த அச்சுறுத்தல் நிலைமையை கருத்தில் கொண்டு நாம் செயற்பட வேண்டியுள்ளது. 

இரண்டாம் உலக யுத்தத்தின் போது எவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சி கண்டு உலகையே அது மாற்றிப்போட்டதோ அதேபோன்று ஒரு நிலைமை இன்று உருவாக்கி வருகின்றது. 

இலங்கை போன்ற நாடுகளுக்கு இது பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். ஆகவே எமது கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டி செலுத்தல் செயற்பாடுகளில் நிவாரணங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனமூடாக பலம் வாய்ந்த நாடுகளிடம் கேட்டுக்கொள்ளும் முயற்சிகளை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். 

அதேபோல் சார்க் நாடுகளின் மா நாடுகளை கூட்டி சகல நாடுகளும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் பொருளாதார மாநாட்டினை நடத்தவும் வலியுறுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார். 

அதேபோல் நாடாக அனைவரும் நெருக்கடியில் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் என்ற வகையில் அரச ஊழியர்களுக்கு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. 

அரச சேவையர்கள் இல்லாது 40 இலட்சம் தனியார் துறையினர் உள்ளனர். அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்ற நிலையில் அவர்களுக்கும் உயரிய சலுகைகளை வழங்கும் வேலைத்திட்டம் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது. அத்துடன் ஓய்வூதியக்காரர்கள், அங்கவீனர்கள், என சகலருக்குமான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது என்றார்.

No comments:

Post a Comment