(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள், வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து கிராமபுறங்களுக்குச் சென்றுள்ளவர்கள் தம்மை பாதுகாப்பதோடு சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.
இது தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அநுராயக்க வெடருவே ஸ்ரீ உபாலி தேரர் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் என்ற ரீதியில் இந்த சந்தர்ப்பத்தில் ஒழுக்கத்துடனும் நீதியைப் பின்பற்றியும் செயற்பட வேண்டும்.
அத்தோடு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கின்றமை இனங்காணப்பட்டால் உடனடியாக உரிய அரச திணைக்களங்களுக்கு அறிவிக்க வேண்டும். காரணம் வளங்களில் மிகச் சிறந்த வளம் மனித வளமாகும். எனவே அதற்கேற்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
மல்வத்து பீடத்தின் அநுராயக்க நியங்கொட ஸ்ரீ விஜிதஸ்ரீ தேரர் தெரிவிக்கையில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதை அனைத்து பிரஜைகளும் புரிந்து கொள்ள வேண்டும். அதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளியைப் பேணாது ஒவ்வொருவரும் சுய தேவைக்காக பொறுப்பின்றி நடந்து கொள்வார்களானால் அது பாரியளவான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெளி பிரதேசங்களுக்குச் சென்று திரும்பியவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதோடு சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment