நிவாரணங்களை அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்துகிறது - சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

நிவாரணங்களை அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்துகிறது - சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி

(நா.தனுஜா) 

ஊரங்குச் சட்டத்தின் விளைவாகத் தமது வருமானத்தை இழந்து உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு இலவச நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். எனினும் அதனை அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காகவும், நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்வது எமக்கு மிகுந்த விசனத்தை அளிக்கிறது. இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளார்கள். 

ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து நேற்று செவ்வாய்கிழமை வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது. 

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூட்டணியின் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டமொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. 

இதன்போது கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதன்படி சில விடயங்கள் குறித்து இணக்கப்பாடொன்று எட்டப்பட்டது. 

முதலாவதாக கொரோனா வைரஸ் உலகில் பல்வேறு நாடுகளுக்கும் பரவியிருக்கும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. 

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பல தலைவர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்த போதிலும், சரியான தருணத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் காரணமாக தற்போது உணவுப் பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்கும் ஊரடங்குச் சட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டிருக்கிறது. 

இலங்கை மிகவும் சிறிய நாடாகும். இந்நாட்டிற்குள் வெளிநாட்டவர்கள் நுழையக்கூடிய ஒரே மார்க்கம் விமான நிலையம் மாத்திரமேயாகும். அவ்வாறிருக்க ஆரம்பத்திலேயே விமான நிலையங்களை மூடுவதற்கோ அல்லது விமான நிலையத்தின் ஊடாக வருபவர்களை உரிய பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். 

ஆனால் முதலாவதாக சுற்றுலாப் பயண வழிகாட்டியொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகக் கண்டறியப்பட்ட பின்னர் கூட, இலங்கை கொரோனா வைரஸ் அண்ட முடியாத நாடு என்றே சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்குப் பிரசாரம் செய்யப்பட்டது. 

இது குறித்து கடந்த ஜனவரி மாதம் 24 மற்றும் பெப்ரவரி 5 ஆம் திகதிகளில் சஜித் பிரேமதாஸவினால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அத்தகைய ஆபத்து நிலையொன்று இல்லையென்றே சுகாதார அமைச்சரும் அரசாங்கமும் கூறிவந்தனர். 

அத்தகைய அலட்சியப்போக்கே தற்போதைய நெருக்கடி நிலைக்குக் காரணம் என்பதே எமது கருத்தாகும். எது எவ்வாறெனினும் பொதுத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பதாலும், அதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவேண்டிய தேவையிருந்தமையினாலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மந்த நிலையடைந்தன. 

எனினும் இறுதியில் தேர்தலை விடவும் நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திப் பொதுத் தேர்தலைப் பிற்போடுவதாக அறிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டிற்கு நன்றி தெரிவிக்கின்றோம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் காரணமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நினைவுபடுத்த வேண்டும். 

இந்நிலையில் ஊரங்குச்சட்டத்தின் விளைவாகத் தமது வருமானத்தை இழந்து உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கும் மக்களுக்கு இலவச நிவாரணப்பொருட்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 

எனினும் அதனை அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களுக்காகவும், நலன்களுக்காகவும் பயன்படுத்திக்கொள்வது எமக்கு மிகுந்த விசனத்தை அளிக்கிறது. இதுகுறித்து தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம். 

அடுத்ததாக நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களைத் தவிர வேறு பல நோயாளர்களும் உள்ளனர். 

அதேபோன்று மருந்துப்பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறையொன்று ஏற்பட்டிருப்பதாகவும் எம்மால் அறியமுடிகிறது. இதற்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்பது பற்றியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட்டது. அதற்கு அரசாங்கம் தனியார் மருந்தகங்களின் உதவியையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றோம். 

இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு எவ்வித இன, மத, கட்சி பேதமுமின்றி அனைத்துத் தரப்பினரதும் உதவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதுடன், அதனை எவரும் தமது தனிப்பட்ட நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளக்கூடாது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றோம்.

No comments:

Post a Comment