(செ.தேன்மொழி)
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் தொகை அதிகரித்துக் கொண்டு செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு பாதுகாப்பான முறையில் சுகாதார சேவையை பெற்றுக் கொடுப்பதன் நோக்கில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி மற்றும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட செயலணிக் குழுவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையிலும் பாதுகாப்பான முறையில் சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பி.சி.ஆர் பிரிசோதனைகளை அதிகரிப்பதற்கு அவசியமான வசிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது மேலும் பேசப்பட்டதாவது, கொவிட் -19 வைரஸ் குறிப்பிட்ட வேகத்தில் பரவி வருகின்றமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான தருணத்திலும் சுகாதார சேவையை முழுமையானவும் பாதுகாப்பான முறையிலும் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்திய நிர்வாக குழுவினரின் பாதுகாப்பிற்காக வைத்திய குழுவில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களை மாத்திரம் இணைத்துக் கொண்டு பாதுகாப்பான முறையில் சுகாதார சேவையை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தீமர்மானம் எடுக்கப்பட்டதுடன் இந்த செயற்பாடுகளில் ஈடுபடும் மருத்துவ குழுவினருக்கு அவசியமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அங்கிகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பிரதேச மட்டத்தில் மருத்துவ சேவையில் ஈடுப்பட்டுள்ள மருத்துவ தரப்பினரின் போக்குவரத்து செயற்பாடுகளுக்கு போதியளவிலான வாகனங்களை விரைவில் பெற்றுக் கொடுத்தல், வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக முன்னெடுக்கப்படுவரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகரித்தல் மற்றும் இந்த பரிசோதனையை முன்னெடுப்பதற்கு அவசியமான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தற்காக ஆசியா அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் நிதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும் செயற்பாட்டு மத்திய நிலையம் போன்ற நிலையங்களை ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் செயற்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருடன் ஆலோசனைகளை பெற்றுக் கொண்டு அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்தல் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது கொரோனா தொற்றை தடுப்பதற்கான விசேட செயலணியை பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, மேலதிக செயலாளர்களான சுனில் த அல்விஸ், வைத்தியர்.லக்ஷ்மி சோமதுங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, பிரதி பணிப்பாளர்களான வைத்தியர் .அமல் ஹர்ஷ தி சில்வா, வைத்தியர்.லால் பனாபிட்டி, வைத்தியர். பபா பலியவடன உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
No comments:
Post a Comment