(எம்.மனோசித்ரா)
இலங்கையின் கொவிட்-19 வைரஸ் நோய் தொடர்பாக தகவல்களை வெளிப்படுத்தும் www.covid19.gov.lk இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ICTA மூலம் இந்த இணையத்தளம் செயற்படுத்தப்படுகின்றது.
கொவிட்-19 தொடர்பாக இலங்கையின் தகவல்களை ஒரே மேடையில் முன்னெடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இணையத்தளத்தின் மூலம் ஜனாதிபதி செயலகம், சுகாதார மேம்பாட்டு அலுவலகம், கொவிட்-19 தொற்று பரவுவதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம், அரசாங்க தகவல் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு ஆகிய நிறுவனங்களின் மூலம் பெறப்படும் தகவல்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன.
கொவிட்-19 பரவுவதை தடுக்கும் அனைத்து தகவல்கள் மற்றும் செயற்பாடுகள், கண்டுபிடிப்புகள் தொடர்பான தகவல்களின் கேந்திர நிலையமாக இந்த இணையத்தளம் செயற்படுவதுடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் சமீபத்திய புதுப்பிப்புகளுடன் துல்லியமான தகவல்களை தடையின்றி பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று நிலைமைக்கு மத்தியில் இந்த இணையத்தளம் சுகாதாரத்திற்கான தகவல்கள் உள்ளடக்கிய ஆவணங்களை மாத்திரம் வரையறுக்காது பொருளாதாரம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுற்றுலா, போக்குவரத்து அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல், சமூக சேமநலம், சட்டம் மற்றும் சமாதானம், பாதுகாப்பு போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment