(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து உரிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு நாட்டில் எவரும் கோரவில்லை. பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது என்பதற்காக மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை.
அரச தலைவரே பாராளுமன்றத்தைக் கலைத்துள்ளார். அவ்வாறான அரச தலைமைத்துவமும் அமைச்சரவையும் இணைந்து எடுக்க வேண்டிய தீர்மானங்கள் உரிய வகையில் எடுக்கப்படுவதோடு, நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணங்களும் முறையாக வழங்கப்படுகின்றன.
இவ்வாறு அனைத்தையும் முகாமைத்துவம் செய்து இந்த வைரஸை முற்றாக ஒழிக்கும் போராட்டத்தில் வெற்றி பெறும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் நாட்டுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டால் நஷ்டமே ஏற்படும். 225 பேருக்கும் சம்பளம் வழங்க வேண்டியேற்படும். எனவே தற்போது பாராளுமன்றத்தைக் கூட்டுவது பிரயோசனமற்றது என்றார்.
No comments:
Post a Comment