இத்தாலி கப்பலில் இருந்த இளைஞனின் கோரிக்கை நிறைவேற்றம் - இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பூசா முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, April 6, 2020

இத்தாலி கப்பலில் இருந்த இளைஞனின் கோரிக்கை நிறைவேற்றம் - இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, பூசா முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை

சுகபோக சுற்றுலா கப்பலான எம்.எஸ்.சீ மெக்னிபிசா (MSC Magnifica) எனும் இத்தாலியைச் சேர்ந்த கப்பலில் பணிபுரிந்த இளைஞன், தான் இலங்கைக்கு வர உதவுமாறு விடுத்த வேண்டுகோள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இக்கப்பலில் சமையல் (Chef) பணியில் ஈடுபட்டு வந்த அநுர ஹேரத் எனும் குறித்த இளைஞன், தன்னை கப்பலில் இருந்து இலங்கைக்கு வர உதவுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றின் மூலம் நேற்று (05) விடுத்த கோரிக்கைக்கு அமைய, அரசாங்கம் அவரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த கப்பல் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்த நிலையில், இன்றைய தினம் (06) சேவை மற்றும் விநியோகத்தை பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அண்மையில் 3 மணி நேரம் நங்கூரமிடும் எனவும், அதன் போது தன்னை நாட்டிற்குள் அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு குறித்த இளைஞன் கோரிக்கை விடுத்திருந்தார். 

அவ்வாறு இல்லையெனில் தான் மீண்டும் இத்தாலிக்கு செல்ல வேண்டி நேரிடும் எனவும், இதனால் தான் நாட்டிற்கு வர அதிக சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் எனவும் தெரிவித்திருந்ததோடு, இதுவே தனக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, எந்தவொரு கப்பலையும் எந்தவொரு நாடும் அனுமதிக்காத நிலையில், உலக சவாரியை மேற்கொண்டிருந்த குறித்த MSC Magnifica எனும் கப்பல், அவுஸ்திரேலியாவில் மார்ச் 29ஆம் திகதி தனது பயணத்தை நிறைவு செய்ய வேண்டி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து தனது தாய் நாடான இத்தாலியை நோக்கி அக்கப்பல் பயணித்தது. ஆயினும் குறித்த கப்பலில் உள்ள எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய இன்று காலை 8.30 மணியளவில் இலங்கைக்கு அண்மையில் நங்கூரமிட்டிருந்த குறித்த கப்பலில் இருந்த இளைஞனை, கடற்படையின் விசேட குழுவினர் நாட்டிற்குள் அழைத்து வந்துள்ளனர்.

தற்போது அவருக்கு 21 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அவரை பூசா கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கடற்படையின் ஊடகப் பெச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்தார்.

No comments:

Post a Comment