கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தை பழைய நிலைக்கு மீட்டுக் கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதி நிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்று நோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும்.
தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து, தீர்வொன்றை வழங்க உலக சமூகம் ஒன்றிணைய வேண்டும்.
நாட்டில் கொவிட் - 19 பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் வணிக மற்றும் தொழிற்துறையைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை நிலையுறுதியாக வைத்திருப்பதற்கும் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கப்ரால் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவிற்குக் கூறியிருக்கிறார்.
இலங்கைக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளாக உல்லாசப் பயணத்துறை மற்றும் ஆடை உற்பத்தித்துறை என்பன விளங்குகின்றன. வெளிநாட்டுக் கேள்வியில் தங்கியிருக்கும் இவ்விரு துறைகளும் கொவிட் - 19 மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் குன்றிப்போயுள்ளன.
உலக நிலைவரம் சீராகாமல் எவ்வளவு பெரிய தொகையில் ஊக்குவிக்கு கொடுப்பனவுகளை வழங்கினாலும் இலங்கையினால் இத்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்க முடியாது என்றும் கப்ரால் கூறியிருக்கிறார்.
எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையின் எண்ணெய் இறக்குமதிக்கு இலாபகரமானதாக இருப்பிலும் கூட, மேற்காசியாவில் இலங்கையர்கள் தொழில் வாய்ப்புக்களை இழக்கக்கூடும்.
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சியேற்படும் பட்சத்தில் எண்ணெய் விலை குறைவினால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.
இரண்டாவது உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் பொருளாதார மீட்சியையும், புனர்நிர்மாணத்தையும் ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் வூட்ஸ் ஏற்பாட்டை ஒத்த சர்வதேச நடவடிக்கையொன்றைத் தற்போதைய நெருக்கடி வேண்டிநிற்கிறது.
இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உலகலாவிய கொள்கைகளை வகுக்குமாறு நாம் ஜி - 20, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரின் ஆலோசகர் சின்ஹவாவிற்குத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment