மன்னார்-நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டத்தில் சாரதியாக கடமையாற்றிய மன்னாரைச் சேர்ந்த 5 பேர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சாரதியாகப் பணியாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 5 பேர் இடைநிறுத்தப்பட்டு அவர்களுக்குப் பதிலாக தென்பகுதியில் இருந்து வந்தவர்கள் சாரதியாகக் கடமையாற்றுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடையம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சாரதிகள் இன்று (வியாழக்கிழமை) மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடுகையில், “மன்னார் நடுக்குடா பகுதியில் இடம்பெற்றுவரும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெஸ்டாஸ் (Vestas Company) நிறுவனத்தின் கீழ் சாரதிகளாகக் கடமையாற்றி வந்தோம்.
கடந்த 25.4.2020 அன்று எவ்வித முன் அறிவித்தல்களும் இன்றி எங்களை வேலை நிறுத்தம் செய்தனர். நாங்கள் அதற்குக் காரணம் கேட்டதற்கு கொழும்பு பகுதியில் இருந்து வந்த மூன்று வாகனங்களும் சாரதிகளுடன் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் புதிய வாகனங்கள் வரும்போது எங்களை மீண்டும் பணிக்கு அழைப்போம் எனத் தெரிவித்தனர்.
ஆனால் கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று வாகனங்கள் வெளிமாவட்ட சாரதிகளுடன் வந்துள்ளன. மேலும் கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கான சம்பளம் வழங்கப்படவில்லை. மேலதிக நேரம் வேலை செய்ததற்காக மேலதிக நேர கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. தற்போது வேலை இன்றி உள்ளோம்.
எனவே, எங்களுக்குரிய வேலையையும் சம்பளத்தையும் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.அன்ரனி டேவிட்சனிடம் வினவிய போது, “மன்னார் நடுக்குடா காற்றாலை மின் உற்பத்தி வேலைத் திட்டத்தில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சாரதியாக பணியாற்றி வந்த மன்னாரைச் சேர்ந்த 5 சாரதிகள் முன்னறிவித்தல் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். தமது பிரச்சினை தொடர்பாக எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான மூன்று மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இவ்விடயம் குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர். மன்னாரை சேர்ந்த பணியாளர்கள் நிறுத்தப்பட்டு தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். நடுக்குடா கிராம மக்கள் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளனர். தற்போது நூற்றுக்கணக்கான பணியாளர்கள் தென் பகுதியில் இருந்து அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்கள் எந்த அடிப்படையில் அழைத்துவரப்பட்டுள்ளார்கள் என்று தெரியவில்லை. தென்பகுதியில் இருந்து பணியாளர்களை அழைத்து வருகின்றமை தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனஞ்செலுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் நிருபர் லெம்பட்
No comments:
Post a Comment