நன்மாதமே றமழான்..! - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

நன்மாதமே றமழான்..!

சுஐப் எம்.காசிம்

மாதங்கள் பன்னிரண்டில் மகிமை பெறும் றமழான் 
ஆதி இறை அளித்த அருள் மிகுந்த நன்மாதம்
வேத மாய் வாழ்வின் ஒளிவிளக்காய் நின் றொளிரும்
போதம் மறை குர்ஆன் புவி பெற்ற நல் றமழான் 

புனித மறை போதிக்கும் புகழ் பூத்த வாழ்வியலை
இனிய நபி சுன்னாவை இயன்ற வரை பேணி நின்று
இதமாக நோன் பிருந்து தொழுது சக்காத் தளிக்கும்
திரு நிறைந்த நல் வாழ்வைச் செப்புகின்ற நல் றமழான்

அல் குர்ஆன் அல்லாவின் அருங்கொடை யென்றே நினைந்து
அனுதினமும் ஓதி அதன் கருத்துணர்ந்து நேர் வழியில்
நல்ல வோர் அடியானாய் நாயனது நேசத்தை
எல்லை யில்லா இன்பத்தை ஈட்டித் தரும் றமழான்

கோபம் குரோதம் கொடுஞ் சூது வாதொழித்து
பேதங் கள் நீக்கிப் பிற மாந்தர் தம்முடனே
பாச முடன் பழகிப் பண்புக் கிலக்கண மாய்
நேசமுடன் வாழ்வதற்கு நெறிப் படுத்தும் நல் றமழான்

ஆருயிரும் அழ குடலும் அனுதினமும் நல்லு ணவும்
சீர்பெருகு பிள்ளை மனை செல்வமுடன் கல்வி தரும்
மாதலைவன் அல்லா வின் மகிமை உணர வைத்து
நேச முடன் அல்லாவை நெருங்க வைக்கும் நல்றமழான்

உள்ள நிதி போதாதென் றுழைத் - துழைத்துச் சேர்த்து வைக்கும்
கன்மனத்து மாந்தர் களும் கனிந்து பெருங் கருணையுடன் 
இல்லாத ஏழை களை அநாதை களை ஆதரிக்கும்
நல்லமனம் கொள்ள வைக்கும் நல மார்ந்த நல்றமழான்

றமழானில் செய்கின்ற நல் அமல்கள் அத்தனைக்கும்
நானே பரிச ளிப்பேன் என்ற இறை வாக்குதனை
மனதார வே உணர்ந்து மா தவத்தில் ஈடுபட
மாந்தர்க் கறி வுறுத்தும் மாண்புடைய நல்றமழான்

தொழுகை - தான் சொர்க்க மதன் திறவுகோல் என்றோதும்
பழுதிலா நல் லெண்ணம் பதிந்த மனத்துடனே
பர்ளோடு சுன்னத்தை தஹஜ்ஜுத் தறாவீஹை
நிறைவு செய்யும் நல் அமலை நினைவூட்டும் நல்றமழான்

வட்டி தவிர்ப் பதற்கும் வட்டிக் – கே வட்டி பெறும்
கெட்ட செயல் அகற்றிக் கீழ்த்தரமாய் வாழுவதை
விட்டொழித்து அல்லாவின் ஆணைகளைப் பேணி நின்று
இட்டமுடன் வாழ்வதற்கு ஏவுகின்ற நல்றமழான் 

நல்லறங்கள் செய்வ தையும் பொல்லாச் செயல் களையும் 
நாயன் அறிகின்றான் என்றபே ருண்மை யினை
உள்ளம் உணர்ந் திடவும் ஒழுக்க நெறி பேணிடவும்
நல்ல தொரு வாய்ப் பளிக்கும் நன் மாதமே றமழான்.

No comments:

Post a Comment