முஸ்லிம்கள் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடப்பவர்கள், வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள் என்ற மனோ பாவம் வருமளவுக்கு நடந்துகொள்ள வேண்டும் - News View

About Us

About Us

Breaking

Friday, April 24, 2020

முஸ்லிம்கள் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடப்பவர்கள், வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள் என்ற மனோ பாவம் வருமளவுக்கு நடந்துகொள்ள வேண்டும்

ஐ.ஏ. காதிர் கான்

இலங்கை வாழ் மற்றும் உலக வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, "முஸ்லிம்கள் எப்பொழுதும் அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக நடப்பவர்கள். முஸ்லிம்கள் வீண் சண்டைக்கும் வம்புக்கும் செல்லாதவர்கள்" என்ற மனோபாவம், அனைவரினது உள்ளங்களிலும் வருமளவுக்கு, இப்புனித ரமழானில் கண்ணியமாகவும், நிதானமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அந்த ரமழான் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த ரமழான் வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். 

புனித ரமழான், கண்ணியமிக்க மகத்துவமிக்க மாதம். இந்த மாதத்தில் குறிப்பாக, கொழும்பு வாழ் மக்கள் நடந்து கொள்ளும் விதம், அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் நிறையவே உள்ளன. கொரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுலில் இருந்து வரும் நிலையில், இதில் கொழும்பு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் கூட, நாம் பொடுபோக்காக நடந்து கொள்ளக் கூடாது. எந்தத் தீர்மானங்களையும் அவசரமாக எடுத்துவிடவும் கூடாது. 

"லொக்டவுன்" செய்யப்பட்ட பொலிஸ் பிரிவுகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசிப்பவர்களும் கூட மிக அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியே செல்லக்கூடாது. கட்டுப்பாடுகளைப் பேணி, விட்டுக்கொடுப்பு, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அரச, பாதுகாப்பு, சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலுக்கமைய நாம் எம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். 

விசேடமாக, ரமழான் காலங்களில் இரவு வேளைகளில் இளைஞர்கள், சிறுவர்கள் எந்தவித வீண் விளையாட்டுக்களிலும் ஈடுபடாமல் இருப்பது, நாம் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள மிகச் சிறந்த வழி முறையாகும். இயன்றவரை, தனிமையாகவே இருந்து கொள்வதே எமக்கும் அடுத்தவர்களுக்கும் மிக்க நல்லது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் எமக்கு ஐந்தாவது தடவையாகவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகை தவறிப்போய்விட்டது. பள்ளிவாசல்கள் யாவும் ஐவேளைத் தொழுகைக்காக மூடப்பட்டுள்ளன. பிள்ளைகளின் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இப்புனித ரமழானில் ஜும்ஆத் தொழுகையை மீண்டும் தருமாறும், பள்ளிவாசல்களைத் திறந்து தருமாறும், பாடசாலைகளை ஆரம்பித்துத் தருமாறும், வல்லவன் இறைவனிடம் துஆப் பிரார்த்திப்போமாக. அத்துடன், ரமழானில் தவறாமல் செய்ய வேண்டிய அமல்களிலும் நாம் கண்ணுங்கருத்துமாக இருந்துகொள்ள வேண்டும். 

வீண் பேச்சுகள், தேவையில்லாத தர்க்கங்கள் போன்றவற்றை இயன்றளவு தவிர்த்து, அதிகமான நேரங்களில், உடல் சோர்வாக உள்ள நேரங்களில் தஸ்பீஹ் மற்றும் இஸ்திஃபார் செய்து கொள்ள வேண்டும்.

இன்றைய அசாதாரண சூழ்நிலையில், இயன்ற வரை குடும்பத்துடன் நோன்பு திறப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஆண்கள் இந்த கண்ணியமான மாதத்தில் தனது அலுவல்களை சிறிது ஒதுக்கி வைத்துவிட்டு, குடும்பத்துடன் நோன்பு திறப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். 

நோன்பு திறக்கும் நேரம் மிகவும் பெறுமதியான நேரம் என்பதால், அந்த கண்ணியமான நேரத்தில் குடும்பத்துடன் அமர்ந்து துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடவேண்டும். 

உலக மனிதர்கள் அனைவரையும் எங்களுடைய துஆக்களில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, கொரானா தொற்றினால் இன்னல் துன்பங்களில் துவண்டு கொண்டிருப்பவர்கள் அத்துடன், உடல் நலமின்மையால் அவதிப்படுபவர்கள், கடன் துன்பங்களில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்கள், திருமணமாகாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஆண், பெண் பிள்ளைகள் உட்பட அனைவருக்காகவும், நம் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழவும், நலமும் வளமும் பெறவும் துஆச் செய்ய வேண்டும்.

அத்துடன், கொரோனா தொற்று நம் நாட்டிலிருந்து விரைவில் நீங்கவும், இந்த பேராபத்திலிருந்து அனைவரும் விடுபடவும் நாம் கையேந்திப் பிரார்த்திக்க வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன், புனிதமான இந்த ரமழானில் நம் அனைவருடைய பாவங்களையும் மன்னித்து, நம்முடைய அனைத்து அமல்களையும் ஏற்றுக் கொண்டு இவ்வுலகிலும், மறுமையிலும் நம்முடைய வாழ்வில் சாந்தியையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் வழங்கி அருள்பாளிப்பானாக ! இயன்றவரை தனிமையாக இருப்போம் ! கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வோம் !!

No comments:

Post a Comment