பறிக்கப்பட்டது அமெரிக்க போர்க் கப்பல் தளபதியின் பதவி : தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

பறிக்கப்பட்டது அமெரிக்க போர்க் கப்பல் தளபதியின் பதவி : தனது கடற்படையினரை காப்பாற்றுமாறு வேண்டுகோள் விடுத்ததால் பதவியை இழந்தார்

வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக் கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்த கப்பலின் கட்டளைத் தளபதி அந்த பதவியிலிருந்து அகற்றப்பட்டுள்ளார். 

அமெரிக்காவின் கடற்படை செயலாளர் தோமஸ் மூடி இதனை அறிவித்துள்ளார். 

எனது உத்தரவின் கீழ் யுஎஸ்எஸ் தியோடர் ரூஸ்வெல்ட்டின் கட்டளைத் தளபதி கப்டன் பிரெட் குரோசியர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டு ரியர் அட்மிரல் ஸ்டுவேர்ட் பேக்கர் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என மூடி தெரிவித்துள்ளார். 

மிகமோசமான மதிப்பீடுகளை மேற்கொண்டதன் காரணமாகவே குரோசியர் நீக்கப்பட்டுள்ளார் என மூடி தெரிவித்துள்ளார். பிரெட் குரோசியர் கடற்படை தலைமைக்கான தனது கடிதத்தை பலருக்கு அனுப்பியதன் மூலம் சர்ச்சையை உருவாக்கியுள்ளார் என மூடி தெரிவித்துள்ளார். 
கப்பலின் கட்டளைத் தளபதி தனது கடிதத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டமைக்காக நீக்கப்படவில்லை, மாறாக அவர் கப்பலில் கொவிட் 19 தொற்றியதனால் ஏற்பட்ட குழப்பத்தின் சவால்கள் தனது தொழிற்சார் தன்மையை பாதிப்பதற்கு இடமளித்தார் என மூடி குறிப்பிட்டுள்ளார். 

இந்த தருணத்தில் தொழில்சார் தன்மையுடன் செயற்படுவதே அவசியமான விடயம் என அமெரிக்காவின் கடற்படை செயலாளர் தோமஸ் மூடி குறிப்பிட்டுள்ளார். 

கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க யுத்தக் கப்பலில் சிக்குண்டுள்ள கடற்படையினரை காப்பாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கப்பலின் தளபதி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

நாங்கள் யுத்தத்தில் ஈடுபட்டிருக்கவில்லை, மாலுமிகள் மரணிக்க வேண்டிய தேவையில்லை என குறிப்பிட்டிருந்த கப்டன் எங்களின் மிகவும் நம்பிக்கைக்குரிய சொத்துக்களாக மாலுமிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க தவறுகின்றோம் என தெரிவித்திருந்தார். போர்க் கப்பலில் வைரஸ் தொடர்ந்து பரவுகின்றது என அவர் குறிப்பிட்டிருந்தார். 
தீர்க்கமான நடவடிக்கை அவசியம் என தெரிவித்துள்ள கப்பலின் தளபதி அமெரிக்காவின் அணுவாயுத விமானந்தாங்கி கப்பலில் இருந்து கடற்படையினரை அகற்றி இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்துதல் என்பது மிகவும் கடினமான நடவடிக்கையாக தோன்றலாம் என குறிப்பிட்டிருந்தார். 

ஆனால் இது எடுக்கப்பட வேண்டிய அவசியமான ஆபத்தான நடவடிக்கை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இதன் மூலம் மாலுமிகளின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதுடன் கப்பல் கூடிய விரைவில் மீண்டும் இயங்குவதை உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

4000 இளம் ஆண்களையும் பெண்களையும் கப்பலில் வைத்திருப்பது அனாவசியமான ஆபத்தை உருவாக்கும் நடவடிக்கை என குறிப்பிட்டுள்ள போர்க் கப்பலின் தளபதி கடற்படையினரின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இதேவேளை அமெரிக்க போர்க்கப்பலில் 114 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சிஎன்என் பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment