கொரோனா வைரஸ் முகக்கசவம் தொடர்பில் அமெரிக்காவிற்கு எதிராக பிரான்ஸ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை கொள்வனவு செய்வதற்கு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்து அனுமதியை பெற்றிருந்த நிலையில் அமெரிக்கா பிரான்ஸ் செலுத்த முன்வந்த பணத்தை விட அதிகமாக செலுத்தி அந்த முகக்கவசங்களை தனது நாட்டிற்கு கொண்டு சென்றுள்ளது என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் விமான நிலைய ஓடுபாதையில் பிரான்சிற்கு செல்ல வேண்டிய முகக்கவசங்களை அமெரிக்கா அதிக விலை கொடுத்து வாங்கியது என ஆர்டி பிரான்சிற்கு தெரிவித்துள்ள அதிகாரியொருவர் பிரான்சிற்கு வர வேண்டிய விமானம் அமெரிக்காவிற்கு சென்றது என குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் வழங்க முன்வந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக அமெரிக்கா வழங்கியது என மற்றுமொரு பிரான்ஸ் அதிகாரி ஏஎவ்பியிற்கு தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்களை பெற்றுக் கொள்வதற்காக நாடுகள் ஒன்றுடன் ஒன்று கடும் மோதலில் ஈடுபட்டுள்ளன என பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முகக்கவசங்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது, எங்கெல்லாம் அது கிடைக்கின்றதோ அமெரிக்கா அங்கெல்லாம் அதனை கொள்வனவு செய்கின்றது, அவர்கள் விலை குறித்து கவலைப்படவில்லை என பிரான்ஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
முகக்கவசங்களை பார்ப்பதற்கு முன்னரே இரண்டு மடங்கு பணத்தை அவர்கள் செலுத்தி விடுகின்றனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
விமான நிலைய ஓடுபாதைக்கு வரும் அமெரிக்கர்கள் நாங்கள் உத்தரவிட்ட முகக்கவசங்களை மிக அதிகளவான பணத்தை செலுத்திவிட்டு எடுத்துச் செல்கின்றனர் என பிரான்சில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிராண்ட் எஸ்ட் பிராந்தியத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment