பலாங்கொடைப் பிரதேசத்தில், கொரோனா தொற்றைக் கொண்ட 5 கடற்படை வீரர்களுடன் தொடர்புபட்ட 42 பேர் தத்தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமிலிருந்து தத்தமது வீடுகளுக்கு விடுமுறையில் வந்திருந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதால் இவர்களுடன் சகவாசம் வைத்திருந்த குடும்பத்தினர் நண்பர்கள் உறவினர்கள் ஆகிய 42 பேர் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் பலாங்கொடை பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த 2 கடற்படை வீரர்களும் இம்புல்பே பிரதேசச் செயலாளர் பிரிவைச் சேர்ந்த 3 கடற்படை வீரர்களும் கொரோனா தொற்று நோய்க்கு உட்பட்டுள்ளதாக இப் பிரதேச பொது சுகாதார உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கடற்படை உறுப்பினர்களுக்கு விடுமுறை வழங்குவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்துள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமை புரியும் 60 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(இரத்தினபுரி நிருபர் - பாயிஸ்)
No comments:
Post a Comment