தலைவிரித்தாடும் கொரோனா! - இளைஞர்களே ஒரு நிமிடம் வாசித்து விட்டு கடந்து செல்லுங்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 21, 2020

தலைவிரித்தாடும் கொரோனா! - இளைஞர்களே ஒரு நிமிடம் வாசித்து விட்டு கடந்து செல்லுங்கள்



2020 ஆம் ஆண்டு ஆரம்பித்தது முதல் உலகத்தில் பல பிரச்சினைகள் ஆங்காங்கே நடந்தேறினாலும் உலகத்தை அப்படியே ஸ்த்தம்பிதம் ஆக்கிய விடயம் என்றால் அது கொரோனா வைரஸ் எனும் கொடிய நோய்தான். இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக பலரும் பலதரப்பட்ட கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்புவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆரம்பத்தில் சைனாவின் வூஹான் மாநிலத்தில் உருவான இந்த வைரஸ் காலப்போக்கில் உலகின் பல பாகங்களிலும் பரவி இன்றுவரை சுமார் 10,000 க்கு மேற்பட்ட உயிர்களை காவு கொண்டுள்ளது என்பதை நினைக்கும் பொழுது பெரிய கவலையாக உள்ளது.

இதில் எமக்கு அவசியமான விடயம் என்னவென்றால் இந்த வைரசின் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள எமது நாடு எவ்வகையான முன் ஆயத்தங்களை உருவாக்கி கொண்டுள்ளது என்பதற்கு மேலதிகமாக இளைஞர்கள் நாம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதே முக்கியமான விடயம் ஆகும். GMOA என அழைக்கப்படும் அரசாங்க வைத்தியர்கள் சங்கமானது இது தொடர்பாக ஒரு விழிப்புணர்வு நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் எம்மை போன்ற அதிகமான இளைஞர்கள் அதனை ஒரு சாதாரன நிகழ்வாகவே நோக்குவது மனதுக்கு வேதனை அளிக்கின்ற விடயமாக காணப்படுகின்றது.

இந்த வைரசானது,

1. சுவாசம் மூலம்

2. நோயாளியுடன் கிட்டிய தொடர்பை பேணுவதன் மூலம்

3. உமிழ் நீர், மூக்கு சளி போன்றவை மூலம்

4. உயிரற்ற பொருள்களின் தொடுகை மூலம்

5. முகம் மற்றும் கண் தொடுகை மூலமும்

இலகுவாக பரவக்கூடியதாக காணப்படுகிறது. ஆக கூட்டத்தில் ஒருவருக்கு இந்த வைரஸ் இருந்தால் போதும் அது முழுக் கூட்டத்தையும் பிடித்து விடும் அளவுக்கு அதன் பரவல் மிக அதிகமாக காணப்படுகிறது.

இந்த வைரஸ் யாருக்கு ஆபத்தை கொண்டுவரும்,

1. வயதான முதியோர்

2. சீனி வருத்தம், மற்றும் புற்று நோய் உள்ளவர்கள்

3. மாற்று அவயங்கள் பொருத்தி தொடர்ச்சியாக தாக்கம் கூடிய மருந்துகள் பாவிப்பவர்கள்.

4. ஏற்கனவே மூச்சு போன்ற சுவாச நோய்கள் உள்ளவர்கள்.

5. சிறுவர்கள் மற்றும் சிறு குழந்தைகள்.

6. கர்ப்பிணித் தாய்மார்கள்.

இவர்களுக்கு மாத்திரம் தான் இது High Level என கூறப்படும் Risky லெவலுக்கு கொண்டு செல்லும் என்பது பொதுவாக GMOA ன் அறிக்கையின் படி நாம் அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

எனவே இளைஞர்கள் எமக்கு இதன் மூலம் எந்த பிரச்சினையும் கிடையாது.

நிற்க

இளைஞர்கள் ஆகிய எமக்கு இதன் மூலம் எந்த பிரச்சினையும் கிடையாது என்று நாம் விரும்பியது போல் ஊர் சுற்றுகிறோம் ஆனால் மிகப்பெரிய நோய் காவிகள் நாம் தான் என்பதை மறந்து விட்டோம்.

உதாரணமாக இந்த வைரசானது ஒரு திடகாத்திரமான இளைஞருக்கு யார் மூலமாகவோ அல்லது எது மூலமாகவோ தொற்றுகின்ற போது அந்த இளைஞனுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்பட்டால் அவர் இலகுவாக குணம் அடைந்து விடுவார். உண்மையில் அவருக்கு எந்த பாதிப்பும் இல்லைதான் ஆனால் அவர் வீட்டுக்கு சென்றால் அங்குள்ள அவரது தாய், தந்தை, வயது கூடியவர்கள், சின்ன சின்ன பிள்ளைகள் என அனைவருக்கும் அது பரவி விடும். இப்படி பரவிய வைரஸ் அவர்களிடமிருந்து இன்னும் பலருக்கு 100% பரவும் வாய்ப்பு உள்ளது. இப்படியே பரவிக் கொண்டே சென்றால் முழு நாடும் கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீள முடியாமல் இத்தாலி போன்று நாமும் மரண எண்ணிக்கையை தினமும் நூற்றுக்கணக்கில் கணக்கிட வேண்டி ஏற்படலாம்.

நண்பர்களே, சற்று யோசியுங்கள் அரசங்கமானது நாட்டின் வருமானம் அனைத்தும் முடங்கினாலும் கவலை இல்லை என்று பாடசாலை, அலுவலகம், நீதிமன்றம், துறைமுகம், விமான நிலையம் என சகல அரச சார்பு, சார்பற்ற இடங்கள் அனைத்துக்கும் விடுமுறை அளித்து இருப்பதன் நோக்கம் இந்த வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான். அந்த அடிப்படையிலேயே இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை முழு நாட்டுக்கும் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது.

இந்த ஊரடங்கு சட்டத்தின் நோக்கம் மக்கள் ஒன்று கூடுவதை இயன்றளவு குறைப்பதன் மூலம் முடியுமானளவு வைரஸ் பரவும் வேகத்தை குறைத்து அதனை அடியோடு இல்லாமற் செய்வதே. இதற்கு இளைஞர்கள் ஆகிய எமது பங்களிப்பே முழுக்க முழுக்க இருக்க வேண்டும்.

இந்த வைரசின் ஆயுட்காலம் பற்றி அறிய வேண்டியது கட்டாயமான ஒரு விடயம் ஆகும்,

1. வளியில் இது 3 மணித்தியாலங்களுக்கு மேல் உயிர் வாழும்

2. செம்பில் இது 4 மணித்தியாலங்களுக்கு மேல் உயிர் வாழும்

3. அட்டை பெட்டிகளில் 24 மணித்தியாலங்களுக்கு மேல் உயிர் வாழும். (கிட்ட தட்ட ஒரு நாள்)

4. பிளாஸ்டிக்களில் 2 தொடக்கம் 3 நாட்களுக்கு மேல் உயிர் வாழும்

5. துருப்பிடிக்காத இரும்பு பொருட்களில் 2 தொடக்கம் 3 நாட்களுக்கு மேல் உயிர் வாழும்.

எனவே, நோய் தொற்றுள்ள ஒருவர் தொட்டு சென்ற பொருட்களை அவர் சென்ற பின்னர் நமது கைகளில் படுமாக இருந்தாலும் இந்த வைரஸ் எமக்கு பரவும் அளவுக்கு கொடியது.

நம்மில் யாருக்காவது பின்வரும் அறிகுறிகள் தென்பட்டால்,
1. காய்ச்சல்

2. தலைவலி

3. இருமல்

4. மூச்செடுபதில் சிரமம்

5. தொண்டை வேதனை

6. தசை மற்றும் உடல் வேதனை

உடனே, பயப்பட தேவை இல்லை நின்று நிதானித்து சூதானமாக சிந்தியுங்கள்

1. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் கொரோனா பாதிப்புள்ள இடங்களுக்கோ அல்லது வெளிநாட்டு பயணங்கள் சென்று வந்தோமா?

2. கடுமையான காய்ச்சல் அத்துடன் சுவாச பிரச்சினை போல நீங்கள் உணர்ந்தால்

3. மூச்சி விடுவதில் சிரமம் இருந்தால்

உடனடியாக சென்று வைத்திய ஆலோசனை பெறுவோம்.

எப்படியோ, இந்த சிறிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே நாம் செய்ய வேண்டியது,

1. வீட்டில் நமது அறையில் காசை காசி என்று பார்க்கமல் 1450 ரூபா மாத பில் வந்தாலும் பரவாயில்லை என்று 50 GB நெட் எடுத்து போனை அருகில் வைத்துக் கொண்டு முழுசாக ஓய்வு எடுத்தல்

2. ராஜா மாறி வித விதமான திரவ சாப்பாடு எடுத்து கொள்ளல். ஜூஸ் வகைகளை அருந்துதல்.

3. காய்ச்சல் கட்டுப்பாடுக்காக பெர்ஸிடமோல் எடுத்து கொள்ளல் மறந்தும் அஸ்பிரின் போன்ற மருந்துகளை எடுக்காது விடல்.

முக்கியமாக எந்த காரணம் கொண்டும் வீட்டை விட்டு மக்கள் கூடுகிற இடத்துக்கு சென்று எமது வீர தீர செயல்களை செய்யாது விடல்.

இப்படி இருந்தும் எமக்கு அதிகமாக சுவாச பிரச்சினை வருமாக இருந்தால் முன்னர் ஆலோசனை பெற்ற அதே டாக்டர் அல்லது வேறொரு டாக்டரை சந்தித்து அடுத்த கட்டம் என்ன என்பது தொடர்பில் முடிவெடுத்தல்.

மேலும், இந்த வைரஸ் எம்மை பிடிக்காமல் பாதுகாத்து கொள்ள நாம் செய்ய வேண்டியது,

1. எந்த வேலைகளை செய்வதற்கு முன்னும் பின்னும் சவர்க்காரம் பாவித்து ஓடும் நீரில் நன்றாக கைகளை கழுவவும்

2. தும்மல் அல்லது இருமலின் போது Mask பாவித்தல் மேலும் அந்த Mask இனை ஒழுங்காக துப்பரவு செய்தல். அத்துடன் முழங்கையை மடித்து முகத்தை மறைத்து தும்மல்

3. காய்ச்சல், இருமல், சளி, தடுமல் உள்ள நண்பர்களிடம் இருந்து சற்று விலகி இருத்தல்.

கொரோனா இருந்தால் எம்மை தனிமைப்படுத்துவர் என்று பயப்பட வேண்டாம். அதன் நோக்கம் உங்கள் மூலமாக உங்கள் தாய், தந்தையை மற்றும் உங்களுக்கு நெருக்காமனவர்களை அது பாதிக்க கூடாது என்பது தான். மேலும் தனிமைப்படுத்தல் என்பது கொலை செய்வதல்ல நாம் மற்றவர்களை கொல்லாமல் பாதுகாப்பது என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்.

குறிப்பு - நாம் நோய் காவிகளாக மாறாமல் இருக்க குறைந்தது இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் 3 நாட்களாவது மக்கள் அதிகம் உலாவும் இடங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் அழிந்து போக எம்மால் முடிந்த பங்களிப்பை செய்வோம்.

உங்களையும் என்னையும் அல்லாஹ் இந்த கொடிய நோயிடம் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இந்த கட்டுரையை எழுத ஊக்கமளித்து இதற்கு முழு காரணமாக இருந்து சகல உதவிகளையும் செய்த மருதமுனையை சேர்ந்த டாக்டர் Shuja Mohamed அவர்களுக்கு நன்றிகள். மேலும் வித விதமான ஐடியாக்கள் தந்த டாக்ட்ர் Ayas Ahamed க்கும் நன்றிகள்.

மு.இ. இயாஸ்தீன்
சட்டத்தரணி

No comments:

Post a Comment