பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் இருந்து சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டோக் இன்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் கடந்த 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி முதல் ஜனாதிபதியாக பதவி வகித்தவர், ஓமர் அல் பஷீர் (75).
கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் விலைவாசி உயர்வால் சூடான் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். ஓமர் அல் பஷீர் பதவி விலக வலியுறுத்தி அங்கு போராட்டங்கள் நடந்தன.
பின்னர் உள்நாட்டுப் போராக வெடித்த இந்த போராட்டங்களின்போது ஓமர் அல் பஷீர் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், சற்றும் எதிர்பாராத திருப்பமாக அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவாத் இப்ன் அவுப், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி ராணுவத்தின் உதவியுடன் ஓமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராணுவத்தின் சார்பில் சூடான் நாட்டின் புதிய பிரதமராக அப்துல்லா ஹம்டோக் (64) என்பவர் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர் அந்நாட்டின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்து அனுபவம் வாய்ந்தவரான பிரதமர் அப்துல்லா ஹம்டோக் இன்று தனது பாதுகாவலர்கள் படையுடன் தலைநகர் கர்ட்டோம் நகரில் உள்ள வீதி வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது பிரதமரின் வாகன வரிசை சென்ற பாதையில் திடீரென்று பயங்கரமான சப்தத்துடன் குண்டுகள் வெடித்தன.
இந்த கொலை வெறி தாக்குதலில் இருந்து பிரதமர் அப்துல்லா ஹம்டோக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் அவர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சூடான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இன்றைய தாக்குதலில் சில கார்கள் சேதமடைந்த காட்சிகளும் வெளியாகி வருகின்றன.
No comments:
Post a Comment