ஆப்கானிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக அஷ்ரப் கானி இன்று மீண்டும் பதவியேற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோற்ற அப்துல்லா அப்துல்லாவும் தன்னை அந்நாட்டின் ஜனாதிபதியாக அறிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள அஷ்ரப் கானி போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டார். வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதில் ஜனாதிபதி அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ஆகையால் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என அப்துல்லா அப்துல்லா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, செபடம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64 சதவீதம் வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் 18-2-2020 அன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற அஷ்ரப் கானி இன்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் 'இந்த நாட்டின் இறையாண்மையை மதித்து பாதுகாப்பதுடன் புனிதமான இஸ்லாமிய மதத்துக்கு கீழ்படிந்து பாதுகாப்பேன் என அல்லாஹ்வின் பெயரால் உறுதியேற்கிறேன்’ என பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்கான் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.
‘ஆப்கானிஸ்தானின் சுதந்திரம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை பாதுகாப்பேன்’ என அப்துல்லா அப்துல்லா உறுதியேற்றார்.
No comments:
Post a Comment