கோடீஸ்வரனுக்கு தமிழரசு கட்சி ஆசனம் வழங்கினால் நாம் எதிர்ப்போம் - அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதால் தீர்க்கக்கூடிய பல விடயங்களை தீர்த்தோம் - News View

Breaking

Post Top Ad

Sunday, March 15, 2020

கோடீஸ்வரனுக்கு தமிழரசு கட்சி ஆசனம் வழங்கினால் நாம் எதிர்ப்போம் - அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியதால் தீர்க்கக்கூடிய பல விடயங்களை தீர்த்தோம்

கோடீஸ்வரனுக்கு தமிழரசு கட்சி ஆசனம் வழங்கினால் நாம் எதிர்ப்போம் என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 

இன்று வவுனியா கணேசபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில், பாராளுமன்ற தேர்தலில் கோடீஸ்வரன் தமிழரசு கட்சியில் போட்டியிடுவதற்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். இதன் மூலமாக கோடீஸ்வரன் தொடர்ந்தும் எமது கட்சியில் இருக்க முடியாது. அதேவேளை தமிழரசு கட்சியும் ஒரு பங்காளி கட்சி என்ற ரீதியில் கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குவது என்பது ஜனநாயக மீறலாகும். 

மூன்று கட்சிகள் ஒன்றினைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிலே ஜனநாயகம் பேணப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் ஜனநாயகத்திற்காக உழைக்கின்ற நாம் எமக்குள் ஜனநாயகத்தை பேண வேண்டும். ஆகவே தமிழரசு கட்சி கோடீஸ்வரனுக்கு ஆசனம் வழங்குமாக இருந்தால் நாம் அதை எதிர்ப்போம். 

பிரிந்து இருக்கின்ற சமூகமாக எங்களுடைய தமிழ் சமூகம் இருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலிலே ஒற்றுமையை காட்டிய தமிழ் சமூகம் இம்முறை பாராளுமன்றத் தேர்தலிலும் ஒற்றுமையாக இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற செய்ய வேண்டும். ஓரிருவருடைய கருத்துக்கள் எம்மை பலவீனப்படுத்தினாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது இறையாண்மையை விட்டுக்கொடுத்து ஒருபோதும் செயற்படவில்லை என்பதனை தெரிவிக்க விரும்புகின்றேன். 

நாங்கள் இதுவரை எதிர்ப்பு அரசியல் நடத்தியவர்கள் கடந்த அரசாங்கத்துடன் சர்வதேசத்தின் வேண்டுகோள்களுக்கிணங்க எமது அரசியல் தீர்வு விடயத்திற்காக வெளியில் இருந்து ஆதரவை வழங்கியிருந்தோம். அதன் காரணமாக அரசியல் அமைப்பு விடயம் நிபுணர் ஆலோசனை வரை வந்திருந்தது. அந்த நேரத்தில் சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி அபிவிருத்தி என்ற ரீதியில் மக்களுக்கு சென்றடையக் கூடிய செயற்பாடுகளை நாம் செய்து தந்திருந்தோம். 

அதுமாத்திரமின்றி அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்கியதால் மக்களுக்கு தீர்க்கக்கூடிய பல விடயங்களை தீர்க்கும் செயற்பாடுகளை மேற்கொண்டோம். இன்று சந்தி சந்தியாக இராணுவத்தினரின் பிரசன்னம். நேர்முகத் தேர்வுக்கு கூட இராணுவத்தினரின் பிரசன்னம். ஆனால் கடந்த அரசாங்கத்தில் வெள்ளை வான் கடத்தல் இருக்கவில்லை. எமது மக்கள் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் உட்பட பல போராட்டங்களை எழுச்சியாக மேற்கொள்ள முடிந்திருந்தது. இதற்கு காரணம் நாம் கடந்த அரசாங்கத்துக்கு வெளியில் இருந்து வழங்கிய ஆதரவேயாகும். 

ஆகவே இன்று சிங்கள மேலாதிக்கத்தினை கக்கிக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதிக்கு அரசாங்கத்திற்கும் நாம் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்றும் நீங்கள் சிங்களவர்களுக்கே தலைவர்கள் என்பதனை மக்கள் கூறுவது மாத்திரமின்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரங்கத்தினை வைத்திருக்கின்ற நாம் ஒற்றுமையாகவே பயணிக்கின்றோம் என்ற செய்தியை அவர்களுக்கு வழங்கும் முகாமாக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

வீரகேசரி

No comments:

Post a Comment

Post Bottom Ad