விஞ்ஞானிகள் மனிதர்களைக் கொல்லும் விடயங்களையே கண்டுபிடிக்கிறார்கள் : இன்னும் கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை - News View

About Us

About Us

Breaking

Thursday, March 5, 2020

விஞ்ஞானிகள் மனிதர்களைக் கொல்லும் விடயங்களையே கண்டுபிடிக்கிறார்கள் : இன்னும் கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை

அதிகமான விஞ்ஞானிகள் மனிதர்களைக் கொல்லும் விடயங்களையே கண்டுபிடிக்கிறார்கள். எதிர்காலம் வித்தியாசமான கோணத்தில் நகர்கிறது என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் முன்னாள் மேலதிகச் செயலாளரும் முன்னாள் பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற சர்வதேச ரீதியாக சாதனை படைத்த மாணவி பாத்திமா ஷைரின் இனாம் மெளலானாவைப் பாராட்டும் விழாவில் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றும் போது, விஞ்ஞானம் மருந்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யவே நோய்களைக் கண்டுபிடிக்கிறது. அணுவாயுதங்கள், யுத்தக்கப்பல்கள், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஆயுதங்கள் என என்னவெல்லாம் கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் எல்லாவற்றையும் செய்து விட்டு இன்னும் கோரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.

கொரியா நாட்டின் அதிபர் அமெரிக்காவை பயங்காட்ட அணு ஆயுதங்களையே காட்டுகிறார். அமெரிக்கா அதை விட பலமாக தன்னைக் காட்டிக்கொள்கிறது. இதைத்தவிர, விஞ்ஞானம் வேறெதையும் வளர்க்கவில்லை. விஞ்ஞானம் மருந்தை உற்பத்தி செய்து விற்பனை செய்யவே நோய்களைக் கண்டுபிடிக்கிறது. விஞ்ஞானம் மனிதனை அழிக்க ஆயுதங்களை உற்பத்தி செய்கிறது. ஒரு காலத்தில் அருகிலிருந்து அடித்துக்கொண்டார்கள். பின்னர் வாளால் வெட்டியவர்கள் இப்போது பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு மறுபுறமிருப்போரை சுட்டு அழிக்க விஞ்ஞானம் பயன்படுத்தப்படுகிறது. இப்படியான விஞ்ஞானம் இந்த உலகத்திற்குத் தேவையில்லை.

ஒரு பிரதேசத்தில் முதலாவது சாதனை படைப்போரை வரலாற்றில் பதிந்து விடுகிறோம். அப்படி முதலாவது எனும் சிறப்பு அந்தஸ்தைப்பெற எத்தனிக்கும் யாரையும் நாம் குறுகிய வட்டத்தினுள் சுருக்கக்கூடாது. கடந்த காலங்களில் சகலரும் சிறப்பாக கல்வி பயில பல வழிமுறைகளை முன்னாள் மந்திரிகள் செய்து கொடுத்திருக்கிறார்கள். புதிய சிந்தனையாளர்களும், புதியகண்டுபிடிப்பாளர்களும் அடையாளப்படுத்தப்பட்டு ஊக்கமளிக்க நாம் முன்வர வேண்டும். பசுமையான எண்ணங்கள், முறையான சிந்தனைகள் சரியான எதிர்காலத்தை முன்னிறுத்தும்.

ஆசிரியன் ஒரு பிள்ளையை வாழ்த்தாத வரை ஒரு பிள்ளை முன்னேற முடியாது. கூடவே தாய், தந்தைகளின் பிராத்தனைகளே ஒரு பிள்ளையை முன்னேற்றுகிறது. பிள்ளைகளின் எண்ணம், சிந்தனை, அர்ப்பணிப்பு என்னவென்பதை நாமறிந்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

நாம் இப்போது வசிக்கும் இந்தப்பிரதேசங்கள் ஒரு காலத்தில் எப்படி இயற்கை அழகுடன் இருந்தது. இப்போது எப்படியிருக்கிறதென்பதை அறிந்து கொள்ள வேண்டும். குளிர் பிரதேசங்கள் கூடிய அமெரிக்கர்கள் கட்டுவது போன்று எமது பிரதேசத்தில் ஒரு காலத்தில் அமெரிக்கன் வடிவமென ஒரு வீட்டை கட்டுவார்கள். வெப்பநிலை கூடிய எமது நாட்டுக்கு அறவே பொருத்தமில்லாத அந்த வீட்டில் நிம்மதியாக வசிக்க முடியாது. அவர்களின் தேவைக்கு அவர்கள் உருவாக்கியதை நாம் புதிய நாகரிகமாக இங்கு பின்பற்றினோம்.

கொங்கிரீட், சீமெந்துக்கல் என உஷ்ணத்திலையே நமது வாழ்க்கை கடக்கிறது. இப்போது வீதிகளுக்கும் கொங்கிரீட் இடுவது மட்டுமின்றி, மேலால் காபட்டும் இடுகிறார்கள். மரத்திற்குப்பதிலாக இரும்பை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். இறைவன் தந்த சகல இயற்கை வளங்களையும் நாம் முறைதவறிப் பயன்படுத்தியுள்ளோம் என்றார்.

இந்நிகழ்வில், கௌரவ அதிதியாக தேசிய காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், இராஜாதந்திரியுமான வைத்தியர் ஏ.உதுமா லெப்பை அவர்களும் விசேட அதிதிகளாக தேசிய காங்கிரசின் முக்கியஸ்தர்கள், மருதம் கலை கூடல் மன்ற தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், கல்விமான்கள், வர்த்தகப்பிரதிநிதிகள், பிரதேச இளைஞர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நூருல் ஹுதா உமர்

No comments:

Post a Comment