அசைக்க முடியாத ஜனாதிபதி - ரஷியா அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டார் விளாடிமிர் புதின் - News View

Breaking

Post Top Ad

Saturday, March 14, 2020

அசைக்க முடியாத ஜனாதிபதி - ரஷியா அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டத்தில் கையொப்பமிட்டார் விளாடிமிர் புதின்

ரஷியா நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் இருமுறை போட்டியிடும் வகையில் திருத்தப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டத்தில் விளாடிமிர் புதின் இன்று கையொப்பமிட்டார்.

ஒருங்கிணைந்த சோவித் யூனியனின் கேஜிஎப் எனப்படும் உளவு அமைப்பில் தனது வாழ்க்கையை தொடங்கியவர் விளாடிமிர் புதின் (67).

1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் திகதி ரஷியா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது அப்போதைய ஜனாதிபதி எல்ட்சின், விளாடிமிர் புதினை பொறுப்பு பிரதமராக முதல்முறையாக நியமனம் செய்தார்.

அப்போது அந்நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 300 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததாக கருதப்பட்ட பகுதிகளில் வான்வழியாக சென்று குண்டுகள் வீசப்பட்ட அதிரடி நடவடிக்கைகளால் புதின் ரஷிய மக்களிடையே புகழ் பெற்றார்.

இதையடுத்து, பல காரணங்களுக்காக ஜனாதிபதியாக இருந்த எல்ட்சின் தனது பொறுப்பை ராஜினாமா செய்து 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி விளாடிமிர் புதினை ரஷியாவின் பொறுப்பு ஜனாதிபதியாக நியமணம் செய்தார்.

பின்னர், ரஷியாவின் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைநிறுத்திவந்த புதின் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றார்.

இதனால் 2024 வரை ரஷியாவில் புதினின் ஆதிக்கம் இருக்கும். இந்த வெற்றியின் மூலம் தொடச்சியாக இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இதற்கிடையில், ரஷியாவில் தற்போது நடைமுறையில் உள்ள அரசியல் சாசன சட்டத்தின்படி தொடர்ந்து இரண்டு முறைக்கு மேல் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் புதின் போட்டியிட முடியாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆளும் ஐக்கிய ரஷியா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்டத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்ற மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த மசோதாவின்படி பழைய நடைமுறைகள் அழிக்கப்பட்டு ஜனாதிபதி  தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான சட்டம் மீண்டும் முதலில் இருந்தே அமுலுக்குவரும்.

அதாவது, ஏற்கனவே தொடர்ச்சியாக இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவர்கள் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.

சுருக்கமாக கூற வேண்டுமானால் தற்போது ஜனாதிபதியாக உள்ள புதின் அடுத்துவரும் 2024 ஆம் ஆண்டு மற்றும் 2030 ஆம் ஆண்டு ஆகிய இரண்டு தேர்தல்களிலும் எந்தவித தடையும் இன்றி போட்டியிடலாம்.

பாராளுமன்ற உறுப்பினர் வலண்டினா தாக்கல் செய்த இந்த மசோதா பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் சமீபத்தி நிறைவேறியது.

இந்த மசோதா ஜனாதிபதி புதினின் ஒப்புதலுடன் சட்டமாக இயற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரஷிய ஜனாதிபதி புதின் இன்று கையொப்பமிட்டுள்ளார்.

68 பக்கங்களை கொண்ட இந்த புதிய சட்டத்தின் நகல் ரஷிய ஜனாதிபதியின் அலுவலகமான கிரெம்ளின் மாளிகை இணையத்தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அரசியலமைப்பு சீர்திருத்தச் சட்டம் ரஷியாவின் அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். இதனை ஏற்றோ, அல்லது நிராகரித்தோ அரசியலமைப்பு நீதிமன்றம் ஒரு வாரத்துக்குள் தீர்மானிக்க வேண்டும்.

அதன் பின்னர் இந்த சட்டம் தொடர்பாக ஆதரித்தோ, எதிராகவோ அந்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad